ஜகார்த்தாவில் குண்டுத் தாக்குதல்: 9 பேர் இறப்பு

வெள்ளி, சூலை 17, 2009 ஜகார்த்தா, இந்தோனீசியா


இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் இரு நட்சத்திர ஹோட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் வெளிநாட்டுப் பயணிகள் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 13 வெளிநாட்டவர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 3 ஆஸ்திரேலியர்களும் அடங்குவர்.


ஜகார்த்தாவின் மிகப் பிரபலமான ரிட்ஸ்-கார்ல்டன், மேரியட் ஆகிய ஹோட்டல்களிலேயே இன்று இந்தக் குண்டுகள் வெடித்தன. இரண்டுமே அருகருகே அமைந்துள்ள ஹோட்டல்களாகும். முதலில் மேரியட் ஹோட்டலிலும் அடுத்த 5 நிமிடத்தில் ரிட்ஸ் ஹோட்டலிலும் இந்த குண்டுகள் வெடித்தன. மேரியட் ஹோட்டல் மீது 2003ஆம் ஆண்டிலும் குண்டுத் தாக்குதல் நடந்தது. அதில் 12 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.


இந்த இரு ஹோட்டல்களிலும் பெரும்பாலும் வெளிநாட்டினரே தங்குவது வழக்கம். எனவே அவர்களைக் குறி வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.


ஜெமா இஸ்லாமியா என்ற தீவிரவாத அமைப்பே இத்தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. 2002இல் இந்தேனேஷியாவின் பாலி தீவில் இந்த அமைப்பு நடத்திய பயங்கர மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 88 ஆஸ்திரேலியர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.


ஜகார்த்தாவில் ஹோட்டல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை விசாரித்து வரும் இந்தோனேசிய பொலிஸார் தாக்குதல்களுக்கு ஜெமா இஸ்லாமையா என்ற இஸ்லாமிய தீவிரவாத குழுவுக்கு தொடர்பிருப்பதாக கூறியுள்ளனர்.


மலேசிய தீவிரவாதி நூர்தின் டாப்பிற்கு இதில் தொடர்பிருப்பதற்கான வலுவான காரணங்கள் இருப்பதாக மூத்த தீவிரவாத எதிர்ப்பு அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த தீவிரவாதி ஜெமா இஸ்லாமையாவில் பிரிந்து சென்ற குழு ஒன்றை நடத்தி வருகின்றார்.

மூலம்

தொகு