சோமாலி பள்ளிவாசல் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

ஞாயிறு, மே 2, 2010

சோமாலித் தலைநகர் மொகதிசுவில் பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 70 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


அல்-சபாப் போராளிக் குழுவின் முக்கிய தலைவர் ஒருவரைக் குறி வைத்தே தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. புவாட் கலாஃப் என்ற அத்தலைவர் தாக்குதலில் தப்பினாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை.


"அப்தல்லா சிதியே என்ற மசூதியில் நேற்று பலர் தொழுகைக்காகக் குழுமியிருந்த போதே குண்டுகள் வெடித்தன. கொல்லப்பட்டோர் மற்றும் காயமடைந்தோரில் பெரும்பான்மையானோர் சாதாரண பொது மக்கள்,” என உள்ளூர் வணிகர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.


எவரும் இத்தாக்குதலுக்கு இதுவரை உரிமை கோரவில்லை.


அப்தல்லா சிதியே மசூதி பொதுவாக அல்-சபாப் போராளிகளால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இங்கு அதன் தலைவர்கள் உரையாற்றுவது வழக்கம்.


சென்ற செவ்வாய்க்கிழமை இதே பகுதியில் அபு உரேயா மசூதியில் நிலக்கண்ணி வெடித்ததில் ஒருவர் கொல்லப்பட்டார்.


1991 முதல் சோமாலியா உள்நாட்டுப் போரால் சின்னாபின்னமடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் தீவிரவாத இசுலாமியப் போராளிகள் தெற்கு சோமாலியாவின் பல பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மூலம்

தொகு