சோமாலிய அரசுத் தலைவர் மாளிகை மீது போராளிகள் தாக்குதல்

திங்கள், மே 24, 2010

அல்-சபாப் போராளிகள் சோமாலியாவின் அரசுத்தலைவர் மாளிகை மீது மோட்டார் தாக்குதல் நடத்தியதை அடுத்து இடம்பெற்ற மோதலில் 14 அப்பாவிப் பொது மக்கள் கொல்லப்பட்டனர்.


போராளிகளின் தாக்குதலை அடுத்து ஆப்பிரிக்க அமைதி காக்கும் படையினரின் ஆதரவுடன் இயங்கும் சோமாலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.


மோட்டார் தாக்குதல் நடந்த வேளை அரசுத் தலைவர் சேக் சரீப் அகமது அரசு மாளிகையில் தங்கியிருக்கவில்லை. அமைதி மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக துருக்கி சென்றிருந்தார்.


தலைநகரின் வடக்கில் உள்ள சிபிஸ், பொண்டியர் மாவட்டங்களில் போராளிகள் தாக்குதல் நடத்தினர்.


கொல்லப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் அடங்குவர். அவர்கள் தங்கியிருந்த வீட்டிமன் மீது படையினரின் மோட்டார் ஒன்று வீழ்ந்து வெடித்தது என ஏஎஃப்பி செய்தியாளர் தெரிவித்தார்.


துருக்கியின் இஸ்தான்பூல் நகரில் இடம்பெற்ற அமைதி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐநா செயலர் பான் கி மூன் அரசுத்தலைவர் அகமதுவின் அரசாங்கத்தை உதவி வழங்கும் நாடுகள் ஆதரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.


கடந்த இரு தசாப்தங்களாக சோமாலியாவில் இடம்பெற்று வரும் வன்முறைகளில் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.


அல்-சபாப் மற்றும் பல தீவிரவாதக் குழுக்கள் சோமாலியாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளின் பெரும்பாலான இடங்களைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன.

மூலம் தொகு