செவ்வாய் கோளுக்கு மனிதர்களை அனுப்புவது தொடர்பான ஆரம்பக்கட்ட பரிசோதனை நிறைவு

புதன், சூலை 15, 2009 மாஸ்கோ, ரஷ்யா:

ஹபிள் விண்வெளித் தொலைநோக்கியில் இருந்து எடுக்கப்பட்ட செவ்வாய்க் கோளின் புகைப்படம்


செவ்வாய்க் கோளுக்கு மனிதர்களை அனுப்புவது தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனையின் நிமித்தம், மாஸ்கோவில் மூடிய விண்கல அமைப்பில் எதுவித வெளியுலகத் தொடர்பும் இல்லாத நிலையில் மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட காலம் தங்கியிருந்த 6 ஐரோப்பியர்களும் செவ்வாய்க்கிழமை வெளியேறியுள்ளார்கள்.


செவ்வாய்க்கிரகத்துக்கான நீண்ட தனிமையான விண்வெளிப் பயணத்தின்போது விண்வெளிவீரர்களின் உடல்நிலை மற்றும் மனோநிலை எவ்வாறு அமையும் என்பதை கண்டறியும் முகமாகவே இந்த பரிசோதனை நடத்தப்பட்டது.


இந்த பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தில் 4 ரஷ்யர்கள், ஒரு ஜேர்மனியர், ஒரு பிரெஞ்சு நாட்டவர் ஆகியோர் பங்கேற்றனர். மேற்படி அறுவரின் உடல்நிலையும் ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


எதுவித ஜன்னலும் அற்ற மேற்படி விண்கல அமைப்பானது தரையிலேயே நிலை நிறுத்தப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. நேரடி வெளியுலக தொடர்பு எதுவும் அற்ற நிலையில் வானொலி சமிக்ஞைகள் மூலம் அறுவரும் மேற்படி நிகழ்ச்சித் திட்டத்துக்கான ஏற்பாட்டாளர்களுடன் உரையாட வசதி செய்து தரப்பட்டிருந்தது.


செவ்வாய்க் கோளுக்கான நீண்ட விண்வெளிப் பயணத்தின் போது வானொலி சமிக்கைகள் பரிமாற்றத்தில் ஏற்படக்கூடிய காலதாமதத்தை கணிப்பிட்டு, சமிக்ஞைகள் 20 நிமிடத்துக்கும் அதிக நேரம் தாமதித்தே பரிமாறப்பட்டன.


இந்த அறுவரும் மூடிய விண்கல அமைப்பில் கழித்த 105 நாட்களானது செவ்வாய்க்கிரக பயணத்துக்கான காலத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவான காலமாகும். செவ்வாய்க் கிரகத்துக்கு பயணத்தை மேற்கொண்டு திரும்ப 520 நாட்களாகும் (சுமார் ஒன்றரை வருடங்கள்) என மதிப்பிடப்பட்டுள்ளது.


அடுத்த கட்டமாக விண்கலத்தில் ஒன்றரை வருட காலத்திற்கு பிறிதொரு குழுவை தங்க வைத்து பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மூலம்

தொகு