செவ்வாய்க் கோளுக்கு 'மாவென்' எனும் புதிய விண்கலத்தை அனுப்ப நாசா தயாராகிறது
செவ்வாய், ஆகத்து 6, 2013
- 6 நவம்பர் 2015: சூரியனின் தாக்கத்தாலேயே செவ்வாய் தனது வளிமண்டலத்தை இழந்தது, புதிய ஆய்வுகள்
- 10 திசம்பர் 2013: செவ்வாய்க் கோளில் வறண்ட ஏரி கண்டறியப்பட்டுள்ளது
- 19 நவம்பர் 2013: நாசாவின் 'மாவென்' விண்கலம் செவ்வாய்க் கோள் நோக்கி சென்றது
- 5 நவம்பர் 2013: இந்திய விண்கலம் மங்கள்யான் செவ்வாயை நோக்கி ஏவப்பட்டது
- 28 செப்டெம்பர் 2013: செவ்வாய் மண்ணில் நீர் கலந்திருப்பதை கியூரியோசிட்டி விண்கலம் கண்டுபிடித்தது
செவ்வாய்க் கோளின் மேல் வளிமண்டலத்தை ஆராயும் பொருட்டு புதிய விண்கலம் ஒன்றை செவ்வாய் நோக்கி அனுப்புவதற்கு அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் நாசா தயாராகி வருவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மாவென் (MAVEN, Mars Atmosphere and Volatiles Evolution) எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கலம் இவ்வாண்டு நவம்பர் 18 முதல் டிசம்பர் 7 வரையான காலப்பகுதியில் புளோரிடாவில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படவிருக்கிறது. 802 கிகி எடையுள்ள இந்த விண்கலம் அட்லசு வி-401 ஏவுகலம் மூலம் ஏவப்படும்.
“வளிமண்டலத்தில் உள்ள வளிமத்தின் இழப்பு எவ்வாறு செவ்வாய்க் கோளின் காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிவதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். முன்னர் அறிந்திராத பல தகவல்களைப் பெற இயலுமென அறிவியலாளர்கள் நம்புகின்றனர்” என நாசா கூறுகிறது.
ஓராண்டு காலத் திட்டப்படி இவ்விண்கலம் செவ்வாயின் சுற்றுப்பாதையை 2014 செப்டம்பரில் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"மாவென் செவ்வாயில் உயிரினங்களைக் கண்டறியாது" எனக் கொலராடோ பல்கலைக்கழக வானியலாளர் புரூசு ஜாக்கொவ்ஸ்கி தெரிவித்தார். "ஆனால் செவ்வாயின் காலநிலை வரலாற்றை அறிவதற்கு இது துணையாக இருக்கும்."
நாசா தற்போது செவ்வாய் முன்னீட்டாய்வு சுற்றுக்கலன், ஸ்பிரிட், ஒப்போர்ச்சுனிட்டி, கியூரியோசிட்டி ஆகிய திட்டங்களை செவ்வாயில் முன்னெடுத்து வருகிறது. இவை அனைத்தும் அக்கோளின் மேற்பரப்பை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டவையாகும்.
மூலம்
தொகு- NASA Begins Preparation for New Mars Mission, ரியாநோவஸ்தி, ஆகத்து 6, 2013
- MAVEN Arrives at Kennedy to Begin Launch Processing, நாசா, ஆகத்து 2, 2013