சூரிய ஆற்றலை நேரடியாக எரிபொருளாக மாற்றும் 'செயற்கை இலை' கண்டுபிடிப்பு

திங்கள், அக்டோபர் 3, 2011

செயற்கை ஒளிச்சேர்க்கை செய்யக் கூடிய இலையை மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலைய அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பேராசிரியர் நொசேரா (இடது) அவரது ஆய்வு மாணவர்களுடன் (லோர்ட் ஹாவ் தீவு, ஆகத்து 2011)

இயற்கையாக இலைகள் சூரிய ஒளி, நீர், கார்பனீரொக்சட்டைப் பயன்படுத்தி காபோவைதரேட்டு மற்றும் ஒக்சிசன் ஆக மாற்றும் ஒளிச்சேர்க்கை முறையை இந்த செயற்கை இலைகள் செய்யும்.


அமெரிக்காவின் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த வேதியியல் பேராசிரியர் டேனியல் நொசேரா இதற்கான ஆய்வறிக்கையைக் கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்க வேதியியல் சங்க தேசிய சந்திப்பில் சமர்ப்பித்திருந்தார். இப்போது அவர் அதனை இவ்வார சயன்ஸ் அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளார். இவரது தொழில்நுட்பம் மூலம் சூரிய ஆற்றலை நேரடியாக வேதியியல் எரிபொருளாக மாற்றி அதனை சேமித்து வைத்து எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.


செயற்கை இலை - சிலிக்கன் சூரியக் கலன் - வெளி இணைப்புகள் ஏதும் இல்லாமல் இயங்கக்கூடியது. இக்கருவி நீருள்ள பாத்திரம் ஒன்றில் வைக்கப்பட்டு சூரிய ஒளி செலுத்தப்படும். உடனடியாகவே இதன் ஒரு பக்கத்தில் இருந்து ஒக்சிசன் குமிழ்களும் மறு பக்கத்தில் இருந்து ஐதரசன் குமிழ்களும் வெளியேறுகின்றன. இவை இரண்டும் வெவ்வேறாக சேகரிக்கப்பட்டு பின்னர் மின்ஆற்றல் உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, எரிபொருள் மின்கலத்திற்கு இவை செலுத்தப்படும் போது, மின்கலம் இவையிரண்டையும் மீண்டும் நீராக மாற்றி அதே வேளையில் மின்னோட்டத்தையும் வெளிவிடுகிறது.


இந்த "செயற்கை இலை" பூமியில் மிக எளிதாகக் கிடைக்கக்கூடிய அதிகச் செலவில்லாத சிலிக்கன், கோபால்ட், மற்றும் நிக்கல் போன்ற வேதியியல் பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் நொசேரா தெரிவிக்கிறார். அத்துடன் சாதாரண நீரில் இதனைப் பயன்படுத்த முடியும். முன்னர் உருவாக்கப்பட்ட செயற்கை ஒளிச்சேர்க்கைகள் பொதுவாக பிளாட்டினம் போன்ற அரிதான விலை உயர்ந்த பொருட்களால் ஆனதாக அவர் குறிப்பிட்டார்.


இந்த தொழில்நுட்பம் மேம்படும் பட்சத்தில் இது ஒரு ஆற்றல் மூலமாக அமையும் என்று அறிவியலாளர்கள் எதிர்வு கூறுகிறார்கள்.


மூலம் தொகு