சூடானில் கடத்தப்பட்ட இரு பன்னாட்டு தொண்டு நிறுவனப் பணியாளர்கள் விடுதலை
செவ்வாய், அக்டோபர் 20, 2009
கடந்த ஜூலை 3 ஆம் நாள் சூடானின் சர்ச்சைக்குரிய பிரதேசமான தார்பூரில் வைத்துக் கடத்தப்பட்ட "கோல்" என்ற ஐரியத் தொண்டு நிறுவனத்தின் இரு பெண் பணியாளர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆயுத முனையில் கடத்தப்பட்ட ஐரியரான சரொன் கொமின்ஸ் (32), மற்றும் உகாண்டா நாட்டைச் சேர்ந்த இல்டா கவுக்கி ஆகியோரே விடுதலை செய்யப்பட்டவர்கள் ஆவர். நூறு நாட்கள் இவ்விருவரும் தடுத்து வைக்கப்பட்டனர்.
எவ்வித நிபந்தனைகளுமின்றி இவர்கள் விடுதலை செய்யப்பட்டமைக்கு நன்றி தெரிவித்துள்ள ஐரிய அரசாங்கம் இவர்களின் விடுதலைக்காக பாடுபட்ட சூடான் அரசாங்கத்தையும் பாராட்டியுள்ளது. கடத்தியவர்கள் இவர்களின் விடுதலைக்காக முன்னர் 2 மில்லியன் அமெரிக்க டாலர்களைக் கப்பமாகக் கேட்டிருந்தனர். எனினும் கப்பம் எதுவும் செலுத்தாமலேயே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என சூடானிய அமைச்சர் அல்-கிலானி தெரிவித்தார்.
சூடானின் தார்பூரில் 2003ம் ஆண்டு போர் மூண்டது. சூடானின் டர்புன் பிராந்தியத்தை தனி இராச்சியமாக்கக் கோரி இப்போராட்டம் வெடித்தது. இதுவரைக்கும் இலட்சக் கணக்கானோர் உயிரிழந்ததுடன் பல்லாயிரம் பேர் தார்பூரை விட்டு வெளியேறியுள்ளனர். தார்பூர் பிரச்சினையை சூடான் அரசாங்கம் கையாண்ட விதத்தை உலக நாடுகள் பல கண்டித்திருந்தன.
மூலம்
தொகு- "Kidnapped Darfur aid staff freed". பிப்சி, அக்டோபர் 18, 2009
- "Two kidnapped aid workers freed after 100 days' captivity". பிரான்ஸ் 24, அக்டோபர் 18, 2009
- "சூடானில் கடத்தப்பட்ட இரு வெளிநாட்டு உதவியாளர்கள் கப்பமின்றி விடுதலை". தினகரன், அக்டோபர் 20, 2009