சீனாவில் ஜூலை கலவரத்தில் ஈடுபட்ட 6 பேருக்கு மரண தண்டனை
செவ்வாய், அக்டோபர் 13, 2009
சீனாவில் வடமேற்குப் பகுதியில் சின்ஜியாங் மாநிலத்தில் கடந்த ஜுலை மாதம் 5ந் நாள் இடம்பெற்ற கலவரத்தின் போது கைது செய்யப்பட்ட 6 பேருக்கு சீன நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. சிறுபான்மையினரான உய்குர் முஸ்லிம்களுக்கும், ஹான் சீனர்களுக்கும் இடையே ஜூலையில் நடந்த மோதலில் 197 பேர் கொல்ல்லப்பட்டனர். அவர்களில் பலர் சீனர்கள் ஆவார்கள். 1,600 பேர் காயமடைந்தனர்.
இந்த கலவரம் தொடர்பாக உய்குர் முஸ்லிம்கள் 718 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 21 பேர் மீது உரும்பி நகர நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கலவரம், கொள்ளை, தீவைப்பு, பொருட்களுக்கு சேதம் விளைவிப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆறு பேருக்கு மரணதண்டனையும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரும் சிறுபான்மையின உய்கூர் இன முஸ்லிம்கள் என சின்ஜியாங் மாநில அரசுப் பேச்சாளரான லி ஜி தெரிவித்தார்.
இக்கலவரங்கள் ஆரம்பமாவதற்குக் காரணமாக இருந்த ஒரு பெரும்பான்மையின ஹான் சீனர் ஒருவருக்கு சென்ற வாரம் மரணதண்டனை வழங்கப்பட்டு, வேறொருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டிருந்தது. ஜூன் மாதத்தில் சீனாவின் குவாஅங்டொங் மாகாணத்தில் விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் இரண்டு உய்கூர் இன முஸ்லிம்களைக் கொலை செய்ததாக இவ்விருவரும் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இக்கொலைச்சம்பவத்திற்குப் பின்னரே சின்ஜியாங்கில் கலவரம் வெடித்தது.
மூலம்
தொகு- "Chinese Court Condemns 6 Ethnic Uighurs to Death for Xinjiang Riots". வொய்ஸ் ஒஃப் அமெரிக்கா, அக்டோபர் 12, 2009
- "China court sentences 6 to death in Xinjiang riots". அசோசியேட்டட் பிரசு, அக்டோபர் 12, 2009
- "கலவரத்தில் ஈடுபட்ட 6 பேருக்கு சீனாவில் மரண தண்டனை". தினகரன், அக்டோபர் 14, 2009