சீனாவின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம், நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு

புதன், ஏப்பிரல் 14, 2010


சீனாவின் மேற்கில் கிங்காய் மாகாணத்தில் 6.9 அளவு கடும் நிலநடுக்கம் தாக்கியதில் நானூறுக்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


கிங்காய் மாகாணத்தில் யூசு என்ற பகுதியில் இன்று அதிகாலை 0749 (2349 கிரீனிச் நேரம்) மணியளவில் இந்த நிலநடுக்கம் இடம்பெற்றது.


ஜீகு என்ற நகரமே கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது நகரின் 80 விழுக்காடு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும் நிலச்சரிவு காரணமாக பாதைகள் மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 80,000 மக்கள் வாழும் இந்நகரில் குறைந்தது 10,000 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக அரசு ஊடகமான சிசிடிவி அறிவித்தது. இறந்தோர் தொகை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.


இடிபாடுகளிடையே இருந்து நூற்றுக்கணக்கானோர் உயிருடன் மீட்கப்பட்டதாகக் காவல்துறையினர் அறிவித்தனர். நிவாரணப்பொருட்களைத் தாங்கிய இராணுவ விமானம் ஒன்று மட்டுமே உள்ளூர் விமானநிலயத்தில் தரையிறங்க முடிந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


இங்குள்ள அணைக்கட்டு உடையலாம் என்ற அச்சத்தினால், பல்லாயிரக்கணக்கானோர் அருகாமையில் உள்ள மலைப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.


இடிந்த பாடசாலை ஒன்றின் அடியில் பல மாணவர்கள் சிக்குண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


2008 ஆம் ஆண்டில் அருகில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 87,000 பேர் கொல்லப்பட்டனர்.

யூசு பிரதேசத்தில் கிட்டத்தட்ட 250,000 பேர் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் திபெத்தியர்கள் ஆவர்.

மூலம் தொகு