பாக்கித்தானில் துப்பாக்கிச் சூடு, ஒன்பது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

ஞாயிறு, சூன் 23, 2013

வடக்குப் பாக்கித்தானில் உணவு விடுதி ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது ஒன்பது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.


இறந்தவர்களில் ஐந்து பேர் உக்ரேனியர், மூவர் சீனர், மற்றும் ஒருவர் லித்துவேனியர் என அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி ஒருவரும் கொல்லப்பட்டார்.


கில்கித்-பால்திஸ்தான் என்ற உலகின் 9வது உயர்ந்த (8,126 மீட்டர்) மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள தங்குமிடப் பகுதியிலேயே இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. சுமார் 20 பேரடங்கிய போராளிகள் தாக்குதல் நடத்தினர். இறந்தவர்களின் கடவுச்சீட்டுக்கள், மற்றும் பணத்தையும் அவர்கள் தம்முடன் எடுத்துச் சென்றுள்ளனர். இப்பகுதியில் மேலும் 40 வெளிநாட்டு மலையேறிகள் தங்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.


பாக்கித்தானின் தெக்ரிக்-இ-தாலிபான் இயக்கம் தாமே இத்தாக்குதலை நடத்தியதாக பிபிசிக்குத் தெரிவித்துள்ளனர். கடந்த மாதத்தில் தமது தளபதிகளில் ஒருவரான வாலியூர் ரெகுமான் என்பவர் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டமைக்கு பதிலடியாகவே தாம் இத்தாக்குதலை நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். வெளிநாட்டினர் மீது தாம் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என அவர்கள் கூறினர்.


கில்கித்-பால்திஸ்தான் பிரதேசம் சர்ச்சைக்குரிய காசுமீர் பகுதியில் அமைந்துள்ளது. 1947 ஆம் ஆண்டில் இந்தியாவும், பாக்கித்தானும் பிரிந்து தனி நாடுகளாக விடுதலை பெற்ற நாளில் இருந்து இப்பகுதி சர்ச்சைக்குரியதாக விளங்கி வருகிறது.


மூலம் தொகு