சிரிய அகதிகள் பல்லாயிரக்கணக்கில் ஈராக்கிய குர்திஸ்தான் சென்றனர்

ஞாயிறு, ஆகத்து 18, 2013

சிரியாவில் இருந்து பல்லாயிரக்கணக்கான அகதிகள் எல்லையைக் கடந்து ஈராக்கிய குர்திஸ்தானுக்குள் சென்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் நிறுவனம் அறிவித்துள்ளது.


நேற்று சனிக்கிழமை மட்டும் 10,000 பேருக்கும் அதிகமானோர் பெஸ்காபர் எல்லையைத் தாண்டியுள்ளனர். ஏற்கனவே கடந்த வியாழன் அன்று 7,000 பேர் அகதிகளாக குர்திஸ்தானுக்குள் வந்துள்ளனர்.


இவ்வளவு பெருந்தொகையானோரின் தேவைகளைக் கவனிக்க ஐக்கிய நாடுகள் நிறுவனமும், குர்திய அரசு அதிகாரிகளும் பெரும் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.


அகதிகள் தொகை திடீரென அதிகரித்திருப்பதன் காரணம் அறியப்படாவிட்டாலும், சிரியக் குர்தியர்களுக்கும், அரசு-எதிர்ப்பு இசுலாமியப் போராளிகளுக்கும் இடையே அண்மைக் காலங்களில் மோதல்கள் அதிகரித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.


மொத்தம் 150,000 சிரிய அகதிகள் ஏற்கனவே ஈராக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். சிரியாவில் மோதல்கள் தொடங்கிய காலப்பகுதியில் இருந்து 3 மில்லியன் அகதிகள் சிரியாவை விட்டு வெளியேறியுள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.


சிரியாவின் மக்கள்தொகையில் 10 விழுக்காட்டினர் குர்தியர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் சிரியாவின் வட-கிழக்கே வாழ்கின்றனர். இப்பகுதிகளில் இருந்து கடந்த ஆண்டு சிரிய அரசுப் படைகள் வெளியேறியதை அடுத்து இப்பகுதிகளை குர்திய உள்ளூராட்சிகளும், போராளிகளும் ஆட்சி செய்து வருகின்றனர்.


சிரியப் பிரச்சினையில் சிக்கியுள்ள குர்தியர்களை மீட்க தாம் தலையிடப்போவதாக அண்மையில் ஈராக்கியக் குர்திஸ்தானின் தலைவர் மசூட் பர்சானி அறிவித்திருந்தார். ஈராக்கியக் குர்திஸ்தான் வடக்கு ஈராக்கின் மூன்று மாகாணங்களைக் கொண்ட ஒரு சுயாட்சிப் பிரதேசம் ஆகும். இவர்களுக்குத் தனியே இராணுவ, மற்றும் காவல்துறையினர் உள்ளனர்.


மூலம் தொகு