சிங்கப்பூர் பொருளாதாரம் மந்த நிலையிலிருந்து மீளூகிறது
புதன், சூலை 15, 2009 சிங்கப்பூர்:
சிங்கப்பூர்ப் பொருளியல் மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதற்கான அறிகுறியாக, இரண்டாம் காலாண்டின் வளர்ச்சி அமைந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இரண்டாம் காலாண்டில் சிங்கப்பூர் பொருளியல் 20.4 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.
நான்கு காலாண்டுகளாக தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வந்த பொருளியல் இப்போது முதல் முறையாக வளர்ச்சி இலக்கை எட்டியுள்ளது. உயிரியல் மருத்துவத் துறை, மின்னியல் துறைகளின் வளர்ச்சியினால் ஆக மோசமான பொருளியல் நெருக்கடியிலிருந்து சிங்கப்பூர் மீளத் தொடங்கியுள்ளது.
இதனால் இவ்வாண்டின் பொருளியல் முன்னுரைப்பை வரத்தக தொழில் அமைச்சு மாற்றியமைத்துள்ளது.
இந்த ஆண்டு 6 முதல் 9 விழுக்காடு பொருளியல் சுருங்கும் என முன்பு முன்னுரைக்கப்பட்டது. தற்போது 4 முதல் 6 விழுக்காடு வரையே சுருங்கும் என கணிக்கப்படுகிறது. எனினும் உலகப் பொருளியல் இன்னமும் நலிவடைந்த நிலையிலேயே இருப்பதால் சிங்கப்பூரின் வளர்ச்சி வலுவற்றதாகவே இருக்கும் என வரத்தக தொழில் அமைச்சு கூறியுள்ளது. அதேநேரத்தில் சென்ற 2008ம் ஆண்டுடன் ஒப்பிட இந்த இரண்டாம் காலாண்டின் வளர்ச்சி 3.7 விழுக்காடு குறைவு என புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
“புள்ளிவிவரக் கணக்குப்படி பார்த்தால் மந்த நிலையில் இருந்து பொருளியல் மீண்டுள்ளது. சிங்கப்பூர் பொருளியல் மீண்டும் வளரத் தொடங்கியுள்ளது,” என்று ஆக்ஷன் இக்னாமிக்ஸ் என்ற ஆய்வு மையத்தின் பொருளியல் வல்லுநர் திரு டேவிட் கோஹென் கூறியுள்ளார். “வளர்ச்சி வலுவாக இருக்காது. எனினும் ஏறுமுகமாகவே இருக்கும்,” என்று ஏஎப்பி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்தார். இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்தபடியே சிங்கப்பூர் பொருளியல் அதிரடி வளர்ச்சி கண்டுள்ளது என்று டிபிஎஸ் குழுமம் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
காலாண்டு அடிப்படையில் தற்போது வளர்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், இவ்வாண்டுக்கான பொருளியல் முன்னுரைப்பில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என வர்த்தக தொழில் அமைச்சு கூறியது.
மெது வளர்ச்சி, எந்நேரத்திலும் மந்தநிலைக்குச் செல்லும் அபாயம் இருக்கிறது என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மை விகிதமும் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாடிக்கையாளர்களின் செலவினக் குறைப்பும் உலகப் பொருளியலின் பலவீனமான நிலையைப் பிரதிபலிக்கின்றன.
மூலம்
தொகு- மந்த நிலையிலிருந்து பொருளியல் மீளூகிறது, தமிழ்முரசு