சனிக்கோளைச் சுற்றியுள்ள பெரும் வளையம் முதல் தடவையாகக் கண்டுபிடிக்கப்பட்டது

புதன், அக்டோபர் 7, 2009

சனிக்கோளைச் சுற்றியுள்ள புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட வளையத்தின் மாதிரி வரைபடம்


சனிக்கோளைச் சுற்றியுள்ள இதுவரை ஒரு போதும் அவதானிக்கப்படாத மிகப் பெரிய வளையம் நாசாவின் "ஸ்பிட்சர்' விண்வெளி தொலைக்காட்டி மூலம் கண்டறியப்பட்டுள்ளது.


இது தொடர்பான தகவல்கள் "நேச்சர்' இதழில் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.


சனிக்கோளின் ஏனைய வளையங்களில் இருந்து 27 பாகை சரிவில் பனிக்கட்டி மற்றும் தூசுகளை உள்ளடக்கிய இந்த வளையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சனியின் நிலவான ஃபீபியில் (Phoebe) இருந்து பனிக்கட்டிகளையும் தூசையும் பெறுவதாகக் கருதப்படுகிறது. 316 பாகை பரனைட் அளவான தாழ்ந்த வெப்பநிலையிலுள்ள இந்த வளையமானது வெப்பக் கதிர்ப்பில் பிரகாசிக்கக் கூடியதாகும்.


எனினும் இந்த வளையம் இதுவரை எவராலும் அவதானிக்கப்படாமல் இருந்ததாக நாசாவின் ஆய்வுகூட பேச்சாளர் விட்னி கிளேவின் தெரிவித்தார். இந்த புதிய வளையமானது சனிக்கோளில் இருந்து 3.7 மில்லியன் மைல் தொலைவில் 7.4 மில்லியன் மைல் தொலைவிற்கு விரிவுபட்டதாக காணப்படுகிறது.


இந்த வளையம் ஒரு பில்லியன் பூமிகளை உள்ளடக்கக்கூடிய அளவில் பெரியதாகும். மேற்படி வளையம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு சனியைச் சுற்றி "ஏ' முதல் "ஈ' வரை பெயர் சூட்டப்பட்டுள்ள 7 பிரதான வளையங்களும் அநேக மங்கிய வளையங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.


"ஸ்பிட்சர்' விண்வெளி தொலைக் காட்டியை கொண்டுள்ள விண்கலமானது பூமியிலிருந்து 66 மில்லியன் தொலைவில் வலம் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்