சச்சின் டெண்டுல்கர் புதிய உலக சாதனை
வெள்ளி, நவம்பர் 6, 2009
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 17,000 ஓட்டங்களை பெற்றுள்ள முதல் வீரர் என்கிற பெருமையை சச்சின் டெண்டுல்கர் பெற்றுள்ளார்.
இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக ஐதராபாத் நகரில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியின் போதே இந்தச் சாதனையை டெண்டுல்கர் படைத்துள்ளார். ஐதராபாத் நகரில் தனது 435 ஆவது ஒரு நாள் போட்டியில் விளையாடிய சச்சின் இதுவரை ஒரு நாள் போட்டியில் 45 சதங்களை அடித்துள்ளார்.
ஒரு நாள் போட்டியில் அதிக ஓட்டங்களை எடுத்துள்ளவர்களின் பட்டியலில் டெண்டூல்கரை அடுத்து இலங்கையின் சனத் ஜெயசூரிய இடம்பெறுகிறார்.
ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக டெண்டுல்கர் இதுவரை 9 சதங்களை அடுத்துள்ளார். அந்த அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் மிக வேகமாக சதமடித்த இந்தியர் என்கிற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
ஆனால், இந்த 5-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் அபாரமான 140 பந்து 175 ரன்கள் இன்னிங்ஸ் விரயமானது. இந்தியா 347 ஓட்டங்கள் எடுத்து 3 ஓட்டங்களால் தோல்வி தழுவியது.
மூலம்
தொகு- "India lose despite Tendulkar ton". பிபிசி, நவம்பர் 5, 2009
- சச்சினின் அபார இன்னிங்ஸ் வீண்; இந்தியா தோல்வி