சச்சார் குழு, மிஸ்ரா ஆணையம் பரிந்துரைகளை அமுல்படுத்த வலியுறுத்தி கருத்தரங்கம்

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

நீதியரசர் ராஜேந்தர் சச்சார் தலைமையில் மத்திய அரசு முஸ்லிம்களின் சமூக பொருளாதார கல்வி நிலையை ஆய்வு செய்ய அமைத்த உயர் நிலைக் குழுவின் அறிக்கையும் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் மதம் மற்றும் மொழிவழி சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையமும் தமது அறிக்கைகளை சமர்பித்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன. 

இந்த இரு அறிக்கைகளும் அறிவுறுத்தியுள்ள  பரிந்துரை களின் நிலை என்னவென்பது குறித்து சென்னை காமராசர் அரங்கில்  மார்ச் 21 அன்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின்  தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமை வகித்தார்.  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துணைத் தலைவர் ஜே.எஸ். ரிபாயீ, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது., தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் (பொறுப்பு) பி.எஸ். ஹமீது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் பி.எம்.ஆர். சம்சுதீன் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் குணங்குடி ஆர்.எம். அனிபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இக்கருத்தரங்கில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்  க. பொன்முடி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில்  தொல். திருமாவளவன்,  காங்கிரஸ் கட்சி சார்பில் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்   உ வாசுகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி. மகேந்திரன் ஆகியோர் பங்கு கொண்டு கருத்துரையாற்றினர். இக்கருத்தரங்கையொட்டி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 1995 முதல் நடத்திய போராட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியும் நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா தனது உரையில் குறிப்பிட்டதாவது. பத்தாண்டுகள் கடந்த பிறகும் சச்சார் மற்றும் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் முழுமையாக நிறை வேற்றப்படாதது வேதனை அளிப்பதாக உள்ளது. 

சச்சார் குழு தனது அறிக்கையில் முஸ்லிம்களின் நிலை செட்யூல்ட் இன மக்களை விட மோசமானதாக இருப்பதாக குறிப்பிட்டது. இன்றைய நிலையில் முஸ்லிம்களின் நிலை இன்னும் மோசமானதாக உள்ளது. எடுத்துக்காட்டாக 2005-ல் இந்திய காவல்துறையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 7.63 விழுக்காடாக இருந்தது. தற்போது அது 6.27 விழுக்காடாக குறைந்துள்ளது.முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் குறைந்திருப்பதை சுட்டிக் காட்டிய சச்சார் குழு, தொகுதி மறுசீரமைப்புகள் செய்ய வேண்டுமென அளித்த பரிந்துரை நிறைவேற்றப்படவில்லை.

 சிறுபான்மையினருக்கான வாய்ப்புகள் சரியான முறையில் அவர்களை அடைய செய்வதற்காக சம வாய்ப்பு ஆணையம் (ணிஹீuணீறீ ளிஜீஜீஷீக்ஷீtuஸீவீtஹ் சிஷீனீனீவீssவீஷீஸீ) அமைக்கப்பட வேண்டுமென்று சச்சார் குழு பரிந்துரைத்தது. இந்த ஆணையம் அமைக்கப்படவில்லை. இந்த ஆணையத்தை மதசார்பற்ற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் உடனடியாக அமைக்கப்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் மதவழி சிறுபான்மையினருக்கு பரிந்துரைத்த இடஒதுக்கீடும் சரியான முறையில் செயல்படுத்தப்படவில்லை.  சச்சார் மற்றும் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்த அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் உறுதியான அழுத்தம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு பேராசிரியர் ஜவாஹிருல்லா பேசினார்;