கிழக்கிலங்கையில் செஞ்சிலுவைச் சங்கம் தனது பணிகளை முடித்துக் கொண்டது
சனி, சூலை 18, 2009 திருக்கோணமலை, இலங்கை:
ஈழப்போர் முடிவுக்கு வந்ததை அடுத்து அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவினரை இலங்கையில் தமது பணிகளைக் குறைத்துக் கொள்ளுமாறு இலங்கை அரசு கேட்டுக் கொண்டதற்கு அமைவாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைக் குழு பணிமனைகள் அனைத்தும் இன்று முதல் மக்களுக்கான சேவையினை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவின் திருகோணமலை மாவட்ட பணியகத்தினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை, மட்டக்களப்பு, மூதூர், மற்றும் அக்கரைப்பற்று பணிமனைகளே இவ்வாறு தமது சேவையினை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக செஞ்சிலுவைக் குழுவினர் 1991ம் ஆண்டு முதல் திருகோணமலை மாவட்டத்தில் தமது பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
செஞ்சிலுவைச் சங்கம் தமது பணிகளை மட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என சிறிலங்கா அரசு உத்தரவிட்டிருக்கின்ற போதிலும், போர் முடிவடைந்தாலும் மனிதாபிமானப் பணிகள் பெருமளவுக்கு உள்ளன எனவும், அதனால் சிறிலங்கா அரசு தமது உத்தரவை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதித்தானிய உட்பட பல நாடுகள் கோரிக்கை விடுத்திருந்த போதிலும், சிறிலங்கா அரசு அந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் புறக்கணித்துவிட்டது.
மூலம்
தொகு- புதினம்
- பிபிசி, 18 ஜூலை 2009