காங்கேசன்துறைப் பகுதியில் சுண்ணக்கல் அகழ்வால் கடல்நீர் கிராமங்களுக்குள் நுழையும் அபாயம்

ஞாயிறு, சூன் 20, 2010

யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

இலங்கையின் வடக்குப் பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமான காங்கேசன்துறைப் பகுதியில் மாவிட்டபுரத்திலிருந்து கீரிமலைக்குச் செல்லும் வீதியின் இருமருங்கிலும் தொடர்ச்சியாக சுண்ணக்கற்கள் அகழ்ந்தெடுக்கப்படுவதால், கடநீர் கிராங்களுக்குள் நுழையும் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்பகுதி மக்களின் மிகப்பெரிய சொத்தான இச்சுண்ணக்கற்கள் எதற்காக அகழ்ந்தெடுக்கப்படுகின்றன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கேட்டுள்ளார்.


காங்கேசன்துறைப் பகுதிக்கு வியாழக்கிழமை பயணம் செய்து அப்பகுதியைப் பார்வையிட்ட பின்னர் அது தொடர்பாக தினக்குரல் செய்தியாளருக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.


உயர்பாதுகாப்பு வலயமான காங்கேசன்துறைப் பகுதியின் மாவிட்டபுரத்திலிருந்து கீரிமலைக்குச் செல்லும் வீதியின் இருமருங்கிலும் சுண்ணக்கற்கள் தொடர்ச்சியாக இன்றும் அகழ்ந்து எடுக்கப்படுகின்றன. இச்சுண்ணக்கற்கள் இப்பகுதி மக்களின் மிகப்பெரிய சொத்து என்பதைவிட இது அவர்களின் வளமாகும்.


சுமார் 4 கிலோமீற்றர் சதுரப்பரப்பளவிற்கும் அதிகமான பிரதேசத்தில் இக்கற்கள் தோண்டியெடுக்கப்படுகின்றன. இப்பிரதேசம் கடலை அண்டியது. இன்றைய நிலையில், கடல்நீர் பிரதேசத்திற்குள் உட்புகும் நிலையிலேயே கடல் மட்டத்தை விட ஆழமாக சுமார் 40 அடி வரை இங்கு பள்ளமாகத் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.


தோண்டப்பட்ட இடத்தில் நிலத்தடி நீர் ஊறி வருகின்றது. சுமார் 4 வருடங்கள் வரையிலும் இப்பகுதியில் கற்கள் தோண்டப்பட்டிருக்கலாம். கீரிமலைக்கு அண்மித்த பகுதியில் வீதியின் இரு மருங்கிலும் கற்கள் தோண்டப்பட்டுள்ளதோடு மிகமிகப் பெரிய இயந்திரங்கள் மூலம் இக்கற்கள் உடைக்கப்பட்டு அங்காங்கே பெரிய பெரிய மலைகள் போல குவிக்கப்பட்டுள்ளன. அதைவிட தொடர்ந்து மேற்படி பகுதியில் வேலைகள் நடைபெறுகின்றன. இயந்திரங்கள் மூலம் கல் அகழ்தலும் கல்லுடைத்தலும் நடைபெற்று வருகின்றது.


சுற்றாடல் இயற்கை வளங்கள் அமைச்சர் அநுர பிரிய தர்ஷன யாப்பா மேற்படி பகுதிக்கு அண்மையில் நேரில் விஜயம் செய்ததுடன் உடனடியாக கற்கள் அகழ்ந்து எடுப்பதை நிறுத்தும்படியும் கூறியிருந்தார்.


ஆனால், அதனையும் பொருட்படுத்தாது தொடர்ச்சியாக கற்கள் அகழ்ந்து எடுக்கப்படுகின்றன. இவ்வாறு கற்கள் எடுக்கப்படுவதால் அப்பகுதியுடன் நன்னீர் உப்புத் தன்மை கொண்ட உவர்நீராக மாற்றமடையலாம் அத்துடன் அப்பகுதியில் எதிர் காலத்தில் மக்கள் குடியிருக்க முடியாத நிலையும் ஏற்படும் என திரு விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

மூலம்

தொகு