கல்லெறிந்து கொல்லும் மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த ஈரானியப் பெண் ’ஒப்புதல் வாக்குமூலம்’

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

சனி, திசம்பர் 11, 2010

ஈரானில் ஒழுக்கக்கேடான முறையில் நடந்தாரெனக் குற்றஞ்சாட்டப்பட்டு கல்லெறிந்து கொல்லும் மரணதண்டனையை எதிர்நோக்கியிருந்த சக்கீனி முகமதி அஸ்தியானி என்னும் பெண் ஈரானின் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.


பிரஸ் டிவி எனப்படும் ஆங்கிலத் தொலைக்காட்சியில் இடம்பெற்ற 25 நிமிட நிகழ்ச்சி ஒன்றில் தனது கணவரைத் தான் கொன்றது எப்படி என்பது குறித்துக் கூறினார். தனது கணவரின் உடம்பில் எவ்வாறு எங்கு ஊசி ஏற்றினார் என்பதைக் கூறினார். தனது வீட்டில் வைத்து கணவருக்கு மருந்து ஏற்றியதாகவும், பின்னர் அஸ்தியானியின் காதலர் எனப்படுபவர் கணவரை மின்சாரம் பாய்ச்சிக் கொலை செய்தார் எனவும் அவர் கூறியுள்ளார். ஏழு தடவைகள் மின்சாரம் பாய்ச்சிய பின்னரே கணவர் இறந்துள்ளார்.


முன்னதாக அஸ்தியானி விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்திருந்ததி அடுத்து இந்தக் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது. இவருக்கு 2006 ஆண்டில் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.


கடந்த நவம்பர் மாதம் 3 ஆம் திகதி அஸ்தியானியின் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்த நிலையில் அதற்கெதிராக பன்னாட்டு அமைப்புகள் கடுமையாக குரல் கொடுத்திருந்தன. மேலும் அஸ்தியானி இத் தண்டனையிலிருந்து மீள்வதற்கு நல்லதோர் சந்தர்ப்பம் உள்ளதாக ஈரானிய மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.


பன்னாட்டு அமைப்புகள் அஸ்தியானி இன்னமும் சிறையில் இருப்பதாகவே தெரிவித்துள்ளன. அவரது மகனும் வழக்கறிஞரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


அஸ்தியானியின் மரணதண்டணை இடைநிறுத்தப்பட்டபோதும் அவரது கணவனின் கொலை வழக்குதொடர்பில் அவர் தூக்கிலிடப்படலாமெனத் தெரிவிக்கப்பட்டது.


மூலம்

தொகு