கணித மேதை இசுரேல் கெல்ஃபாண்ட் இறப்பு

சனி, அக்டோபர் 10, 2009, நியூசெர்சி, ஐக்கிய அமெரிக்கா:


கணிதத்துறையில் குலக் கோட்பாடு, ஒப்புநிறுத்துக் கோட்பாடு (Representation Theory) ஆகியவற்றில் ஆழமாகப் பங்களித்த கணித அறிஞர் இசுரேல் கெல்ஃபாண்ட் தனது 96-வது அகவையில் அக்டோபர் 5 திங்கட்கிழமை அமெரிக்காவில் நியூ செர்சியில் காலமானார்.


உக்ரைனின் ஒடேசா என்னும் இடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இசுரேல் கெல்ஃபாண்ட் (Israel Gelfand) முன்னைய சோவியத் ஒன்றியத்தில் புகழ்மிக்க கணித அறிஞர் ஆவார். இவருடைய ஆய்வுநிலைப் படிப்புக்கு வழிகாட்டியாக இருந்தவர் பெரும்புகழுடைய ”ஆந்திரே கோல்மோகொரோவ்” (Andrei Kolmogorov). மாசுக்கோ பல்கலைக்கழகத்தில் நெடிய ஒரு தலைமுறை முழுவதும் கணித ஓளிவீசிக்கொண்டிருந்த இவர் தன்னுடைய 76 ஆம் அகவைக்கு சற்று முன்னர் ஐக்கிய அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார். எம்.ஐ.டி-யிலும், ஆர்வர்டு பல்கலைக்கழகத்திலும் பணியாற்றிய பின்னர் நியூ செர்சியில் உள்ள ரட்கர்சு பல்கலைக்கழகத்தில் சிறப்புமிக்கப் பேராசிரியராகப் (Distinguished Professor) பணி ஏற்றார். இவர் உருசியாவின் உயர் பெருமையாகிய இலெனின் புகழ்வரிசைப் பதக்கமும் (Order of Lenin), கணிதத்துறையின் வுல்ஃவ் பரிசையும் (Wolf Prize) பெற்றார். இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி ஃவெல்லோவாகவும் (அரச குமுக சிறப்பாளராகவும்) தேர்வு செய்யப்பெற்றார்.


இவர் கணிதத்துறையில் குலக் கோட்பாடு (Group Theory), இயற்பியலில், குவாண்டம் துறையில் பயன்படும் ஒப்புநிறுத்துக் கோட்பாடு (representation theory) ஆகியவற்றில் ஆழமாகப் பங்களித்துள்ளார். ஒப்புநிறுத்தக் கோட்பாடு அதிகமாக அறியப்படாத ஒன்று. தொகை வடிவவியல் (integral geometry) என்னும் துறையில் இவர் ஆற்றிய ஆய்வுகளும் அதன் முடிவுகளும் இன்று மருத்துவத்தில் உடல் உள்ளுறுப்புகளை நுண்படம் எடுக்கும் அணுக்காந்த ஒத்ததிர்வு படக் கலையிலும் (Magnetic Resonance Imaging, MRI), கணிவழி குறுக்குவெட்டு புதிர்க்கதிர்ப் படம் (CAT)எடுத்தல் முதலியவற்றிலும் பெரிதும் பயன்படுகின்றன.

அடிச்சான்று