கடுங்குளிர் நுட்பத்தில் உருவான இந்தியாவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வி

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

வியாழன், ஏப்பிரல் 15, 2010



இந்தியாவின் தொழில்நுட்பத்தில் உருவான கடுங்குளிரிய உந்துபொறி (cryogenic engine) பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி - டி3 ஏவுந்தி (ராக்கெட்) விண்ணுக்கு ஏவப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்ததாக இந்திய வானியலாளர்கள் அறிவித்தனர்.


ஜிஎஸ்எல்வி செயற்கைக்கோள்

இன்று சென்னை அருகே உள்ள சிறியரிக்கோட்டா என்னும் இடத்திலிருந்து மாலை சரியாக 4.27 மணிக்கு இவ்விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. மணித்துளிக்கு (நிமிடத்திற்கு) 6 கி.மீட்டர் வேகத்தில் சென்றது. முதல் இரண்டு உந்துபொறிகள் எரிந்தாலும் மூன்றாம் கட்ட நிலையில் கடுங்குளிரிய உந்துபொறி பொருத்தப்பட்ட முக்கிய ஏவுந்துபொறி எரிந்தது. ஆனால் இந்த இயந்திரம் சரியாக செயற்படத் தவறி விட்டதால், செய்மதி (செயற்கைத் துணைக்கோள்) பாதையை விட்டு விலகிச் சென்றது.


செய்தியாளர்களை சந்தித்த இசுரோ தலைவர் கே.ராதாகிருட்டிணன் கூறுகையில், ஏவுந்தி (ராக்கெட்) ஏவப்பட்ட 304 நொடியில் கடுங்குளிரிய உந்துபொறி எரிய ஆரம்பித்தது. ஆனால் துணை உந்துப்பொறிகள் இரண்டு சரிவர வேலை செய்யவில்லை என்று தெரிவித்தார். மேலும் இதுதொடர்பான விரிவான அறிக்கை இன்னும் மூன்று நாட்களில் வெளியிடப்படும் என்றும், இன்னும் ஒரு ஆண்டில் அடுத்த ஏவுந்தி (ராக்கெட்) ஏவப்படும் என்று தெரிவித்துள்ளார்.


கடுங்குளிரிய உந்துபொறி தொழில்நுட்பத்தைப் பெற 18 ஆண்டுகால முயற்சியை இந்தியா எடுத்துள்ளது. முன்னர் உருசியாவின் கடுங்குளிரிய தொழில்நுட்ப உதவியோடு மேலடுக்குகள் செய்யப்பட்டன. 1992- இல் இத்தொழில்நுட்பத்தை ரஷ்யாவிடமிருந்து இந்தியா பெறுவதாக இருந்த நிலையில், அமெரிக்கா அளித்த நெருக்கடியால் உருசியாவினால் அத்தொழில்நுட்பத்தை வழங்க இயலவில்லை. இதனால் அத்தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்கத் திட்டமிடப்பட்டது. இந்தியாவிற்கு இத்தொழில்நுட்பத்தை உருவாக்க 36 கோடி இந்திய ரூபாய் செலவாகிறது.

மூலம்

தொகு