ஐவரி கோஸ்ட் தாக்குதலில் 10 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்

புதன், பெப்பிரவரி 23, 2011

ஐவரி கோஸ்டின் அபிஜான் நகரில் இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதல் ஒன்றில் அந்நாட்டின் சர்ச்சைக்குரிய அரசுத்தலைவர் லோரென்ட் குபாக்போவுக்கு சார்பான பாதுகாப்புப் படையினர் 10 பேர் கொல்லப்பட்டனர்.


எதிர்க்கட்சித் தலைவர் அலசானி ஓட்டாராவின் செல்வாக்குள்ள பகுதி ஒன்றில் இராணுவ வாகனங்கள் தாக்குதலுக்குள்ளானது. கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் ஓட்டாரா வெற்றி பெற்றதாக ஐக்கிய நாடுகள் அங்கீகரித்துள்ளது. ஆனாலும், லோரெண்ட் குபாக்போ பதவியில் இருந்து விலக மறுத்து வருகிறார். ஆப்பிரிக்க ஒன்றிய நடுநிலையாளர்கள் குழு ஒன்று இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக ஐவரி கோஸ்டில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது.


கடந்த திங்கட்கிழமையன்று அரசுக்கு எதிராக இடம்பெற்ற இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் இராணுவத்தினர் துப்பாக்கித் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டதாக பிபிசி செய்தி தெரிவிக்கிறது.


நேற்று நடந்த தாக்குதலில் நான்கு இராணுவ வாகனங்கள் தாக்கப்பட்டன. அதில் பயணம் செய்த அனைத்து இராணுவத்தினரும் இறந்துள்ளதாக பாதுகாப்புத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆப்பிரிக்க ஒன்றியக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் ஜேக்கப் சூமா கருத்துத் தெரிவிக்கையில், "அதிகாரப் பரவல் கொண்ட இடைக்கால அரசு ஒன்றை அமைக்க நாங்கள் முயன்று வருகின்றோம்," எனக் குறிப்பிட்டார்.


இதற்கிடையில், தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவை எதிர்க்கட்சித்தலைவர் அலசானி ஓட்டாராவின் ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டு கோசங்களை எழுப்பினர். “உண்மையைச் சொல்லு, உண்மையைச் சொல்லு” என அவர்கள் சூமாவுக்கு எதிராகக் கோசமிட்டனர்.


கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து ஓட்டாராவின் ஆதரவாளர்கள் 500 பேர் பாதுகாப்புபடையினரால் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.


மூலம் தொகு