ஐநா பொதுச்சபையில் சிரியாவுக்கு எதிராக மீண்டும் தீர்மானம், சீனா, உருசியா கடும் எதிர்ப்பு

வெள்ளி, மே 17, 2013

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் சிரியாவுக்கு எதிராக தீர்மானம் கடந்த புதன்கிழமை அன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு சீனாவும், உருசியாவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.


சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் அரசின் படையினருக்கும், அமெரிக்கா மற்றும் அமெரிக்க ஆதரவு மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் ஆயுதம் ஏந்தி போராடும் குழுவினருக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர ஐநாவும், உருசியாவும் தீவிரமாக முயன்று வருகின்றன. இதற்காக ஜெனிவாவில் மே மாதக் கடைசியில் மாநாடு நடத்த ஏற்பாடு நடந்து வருகின்றன. ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் இதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார்.


இந்த நிலையில் ஐநா சபையில் புதனன்று சிரிய அரசுக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீர்மானத்தில் எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை எதிர்க்கும் சிரிய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பொதுமக்கள் வாழும் பகுதிகளில் சிரிய அரசுப் படைகள் பலம் வாய்ந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவதாகவும், மனித உரிமைகள் திட்டமிட்ட முறையில் மீறப்பட்டு வருவதாகவும் சிரியா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இந்த தீர்மானத்தின் மீது ஐநாவுக்கான பிரேசில் நாட்டுத்தூதர் மரியா லூசியா ரிபைரோ வியோட்டி பேசும்போது, சிரியா நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க சர்வதேச சமூகம் முயன்று வரும், இந்த நேரத்தில் அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்திருப்பது, சமாதான முயற்சியை பலவீனப்படுத்தி விடும். இருதரப்பினரும் ஆயுதங்களை குவிப்பதை தடுப்பது குறித்து தீர்மானத்தில் எதுவும் இல்லாதது அநீதியானது என்று வேதனையுடன் குறிப்பிட்டார். ஐநாவுக்கான சீனாவின் நிரந்தர உறுப்பினர் லீபாடோங் பேசும்போது, சிரியாவுக்கு எதிராக கட்டாய வாக்கெடுப்பு நடத்துவது உறுப்பு நாடுகளிடையே உள்ள ஒற்றுமையையும், சமாதான முயற்சியையும் கெடுத்துவிடும் என்றார். உருசியாவின் நிரந்தர உறுப்பினர் அலெக்சாண்டர் பான்கின் பேசும்போது, சிரியா அரசை மாற்றுவதை நோக்கமாக கொண்டு அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள இந்த தீர்மானம் மிக தீமையானது. அழிவை ஏற்படுத்தக்கூடியது என்று ஆவேசத்துடன் கூறினார்.


இறுதியில் சிரிய அரசின் பிரதிநிதி பசீர் ஜஃபாரி உரையாற்றும் போது, சிரியாவில் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அரசை அகற்ற முயன்று வருகிறார்கள். பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக சிரியாவின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிக்க முயன்று வருகிறார்கள். இதை அனுமதிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார். ஜெனீவாவில் நடக்க இருக்கும் அமைதி பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு காண்பது சர்வதேச நாடுகளின் கடமை என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


இதன் பின்னர் இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. ஐநா சபையின் மொத்த உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 193. அன்று வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நாட்டு பிரதிநிதிகளில் 107 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாகவும், 12 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 59 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த நாடுகளில் சீனாவும், உருசியாவும் அடங்கும். இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்பட 59 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.


சிரியாவில் போரிட்டு வரும் அனைத்து குழுக்களையும் ஜெனீவா சர்வதேச மாநாட்டில் பங்கு பெறும் முயற்சியில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் மாஸ்கோ புறப்பட்டுச் சென்ற நாளில், ஐநாவில் சிரியா அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மூலம் தொகு