ஏகே-47 துப்பாக்கியைக் கண்டுபிடித்த கலாசுனிக்கோவின் 90வது பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
வியாழன், நவம்பர் 12, 2009
இயந்திரத் துப்பாக்கியான ஏகே 47 ஐக் கண்டுபிடித்த மிக்கைல் கலாசுனிக்கோவ் கலாஷ்நிகோ செவ்வாய்க்கிழமை தனது 90வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இவரின் பிறந்தநாளை முன்னிட்டு உருசியாவின் பாதுகாப்புத் தலைமையகமான கிரம்ளினில் அரச வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதிபர் திமித்ரி மெட்வெடெவ் இவ்வைபவத்தில் கலந்துகொண்டு கலாசுனிக்கோவுக்கு புகழாராம் சூட்டினார்.
கலாசுனிக்கோவ் 1947ம் ஆண்டு ஏகே47 தானியங்கித் துப்பாக்கியைக் கண்டுபிடித்தார். இதன் பிறகு ரஷ்யாவில் இவரின் புகழ் உச்சக் கட்டத்தை எட்டியது.
உருசியாவின் ஆயுத மேதை என இவருக்குப் புகழ் மாலை சூட்டப்பட்டதுடன் அரசியல்வாதிகளின் ஆதரவையும் பெறலானார். இலக்கியவாதியான கலாசுனிக்கோவ் பின்னர் பிரபல ஆயுத உற்பத்தியாளராக மாறினார்.
உருசியாவின் ஆயுதங்களுக்கு மிகப் பொருத்தமான உதாரணம் கலாசுனிக்கோவ் என்றும் அதிபர் சொன்னார். இவ்வைபவத்தில் கலந்துகொணடு உரையாற்றிய கலாசுனிக்கோவ்,
"நான் ஏகே47ஐ தாய்நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் நல்ல நோக்குடனே தயாரித்தேன். அரசியல்வாதிகள் இந்த ஆயுதத்தை மனித அழிவுக்குப் பாவிப்பது வேதனையளிக்கின்றது.
இளமையில் இலக்கியவாதியாக, கவிஞராக இருந்த என்னை விதி ஆயுத உற்பத்தியாளராக மாற்றிவிட்ட தென்றார்.
1938 ல் செஞ்சேனைப் படைப்பிரிவில் கட்டாயமாக சேர்க்கப்பட்டார். அங்கே பீரங்கி வண்டியின் பணியாளராக பணியமர்த்தப்பட்டார். விரைவிலேயே டி-34 பீரங்கிப் படைக்கலனின் 24 வது பிரிவுக்கு புரோடித் தாக்குதலில் உருசியப்படைகள் பின்வாங்குவதற்கு முன் மாற்றப்பட்டார். குறிப்பிடத்தக்கப் பின்னடைவான பிரயன்ஸ்க் தாக்குதலில் உருசியப் படைகள் மிகவும் மோசமான நிலையில் பின் வாங்கின. இந்தத் தாக்குதலே இச்சுடுகலனை உருவாக்கக் காரணமாயிற்று.
பல்கேரியா, சீனா, போலந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் தற்போது ஏகே47 ஐ உற்பத்தி செய்கின்றன. கெரில்லா அமைப்புகள் இராணுவங்கள் என்பன ஏகே47ஐ பிரதான ஆயுதமாகப் பாவிக்கின்றன.
மூலம்
தொகு- "கலாஷ்நிகோவின் 90வது பிறந்த நாளையிட்டு கிரம்ளினில் அரச வைபவங்கள்". தினகரன், நவம்பர் 12, 2009
- "Kalashnikov 'wanted to be poet'". பிபிசி, நவம்பர் 10, 2009