உகாண்டாவுக்கு அமெரிக்கப் படைகளை அனுப்ப ஒபாமா திட்டம்

சனி, அக்டோபர் 15, 2011

உகாண்டாவின் பிரபுக்களின் எதிர்ப்பு இராணுவம் என்ற தீவிரவாத அமைப்பினருக்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள உள்ளூர்ப் படைகளுக்கு உதவும் முகமாக 100 அமெரிக்க இராணுவத்தினரை அந்நாட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அரசுத்தலைவர் பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.


இவர்கள் தேசிய படையினருக்கு ஆலோசனை, மற்றும் "தகவல்களை" வழங்குவர் என ஒபாமா அமெரிக்க காங்கிரசுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


உகாண்டாவில் ஒரு சிறிய அமெரிக்கப் படையினர் ஏற்கனவே சென்றுள்ளனர். தேவையெற்படும் பட்சத்தில் ஏனைய மத்திய ஆப்பிரிக்க நாடுகளுக்கும் துருப்புக்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.


மத்திய ஆப்பிரிக்கப் பிராந்தியத்தில் பொதுமக்கள் படுகொலைகள், பாலியல் வன்முறைகள், மற்றும் கடத்தல் போன்றவைகளுக்கு எல்ஆர்ஏ எனப்படும் பிரபுக்களின் எதிர்ப்பு இராணுவத்தினரே (Lord's Resistance Army) பொறுப்பு எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜோசப் கோனி என்பவர் இக்குழுவிற்குத் தலைவராக இருக்கிறார். "கொல் அல்லது கைப்பற்று" என்ற கொள்கையையே அமெரிக்கப் படையினர் கடைப்பிடிப்பர் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


எல்ஆர்ஏ இயக்கத்தின் ஆயுதங்களைக் கலைவது மற்றும் அவ்வியக்கத்தின் தலைவரை நீதிமன்றில் நிறுத்துவது போன்றவற்றுக்கு உதவுவது குறித்து அண்மையில் அமெரிக்காவில் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதனையடுத்தே அமெரிக்க அதிபர் துருப்புக்களை அனுப்ப முடிவு செய்துள்ளார்.


கடந்த 20 ஆண்டுகளில் உகாண்டாவின் வடக்குப் பகுதியில் குறைந்தது 30,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2 மில்லியன் மக்கள் வரை இடம்பெயர்ந்துள்ளனர். சிறுவர்கள் கடத்தப்பட்டு இயக்கத்தில் சேர்க்கப்பட்டதாகவும், பெண் பிள்ளைகள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


இக்குழு கொங்கோ சனநாயகக் குடியரசு, தெற்கு சூடான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு போன்ற அயல் நாடுகளில் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.


மூலம்

தொகு