உகாண்டாவின் கிழக்கே நிலச்சரிவு, பலர் உயிரிழப்பு

செவ்வாய், சூன் 26, 2012

உகாண்டாவின் கிழக்கே மலைப்பகுதி ஒன்றில் இடம்பெற்ற நிலச்சரிவை அடுத்து மூன்று கிராமங்கள் மூழ்கியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. பலர் உயிரிழந்துள்ளனர்.


18 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக உகாண்டா செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. மேலும் பலர் இடிபாடுகளிடையே சிக்குண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. புடூடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வீடுகள் நிலத்தில் புதையுண்டுள்ளன. மொத்தம் 300 பேர் வரையில் இக்கிராமங்களில் வாழ்ந்து வந்தனர். குறைந்தது 72 பேர் வரையில் உயிர் தப்பினர், இவர்கள் அனைவரும் சந்தைக்குச் சென்றவர்கள் ஆவர்.


கென்ய எல்லைக்கருகில் உள்ள எல்கோன் மலையை அண்டிய பகுதியிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. இப்பகுதியில் அண்மைக்காலமாக பெரும் மழை பெய்து வந்ததெனத் தெரிவிக்கப்படுகிறது.


எல்கோன் மலைப் பகுதியில் கோப்பிச் செய்கை காரணமாக காடுகள் அழிக்கப்பட்டு வருவதனாலேயே நிலச்சரிவுகள் இங்கு அடிக்கடி நிகழ்வதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். கடந்த ஆகத்து மாதத்தில் கிழக்கு உகாண்டாவில் புலாம்புலி மாவட்டத்தில் கிராமம் ஒன்று சேற்றில் அள்ளுண்டதில் 24 பேர் கொல்லப்பட்டனர். 2010 மார்ச் மாதத்தில் இடம்பெற்ற நிலச்சரிவில் 350 பேர் உயிரிழந்தனர்.


மூலம் தொகு