ஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 72 பேர் உயிரிழப்பு

This is the stable version, checked on 16 சனவரி 2011. Template changes await review.

திங்கள், சனவரி 10, 2011

நூற்றுக்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற ஈரானியப் விமானம் ஒன்று வடமேற்குப் பகுதியில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொறுங்கியதில் குறைந்தது 72 பேர் கொல்லப்பட்டனர். தலைநகர் தெகரானில் இருந்து புறப்பட்ட ஈரான்ஏர் போயிங் 727 விமானம் 700 கிமீ தொலைவில் உள்ள ஊர்மியா என்ற நகரில் தரையிறங்கும் போது வெடித்துச் சிதறியது.


ஈரானில் ஊர்மியா நகரம்

32 பேர் காப்பாற்றப்பட்டதாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. கடும் பனி காரணமாக மீட்பு வேலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னர் வந்த செய்திகள் 50 பேர் வரையில் உயிர் தப்பியதாகத் தெரிவித்தன. இவ்விபத்து நேற்றிரவு உள்ளூர் நேரப்படி 1945 மணிக்கு இடம்பெற்றதாக ஈரானிய அரசுத் தொலைக்காட்சி அறிவித்தது. கடுமையான காலநிலையே இவ்விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


விமானம் பல துண்டுகளாக வெடித்திருந்தாலும், குண்டுவெடிப்பு இடம்பெறவில்லையென ஈரானின் செஞ்சிலுவைச் சங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் வடக்கு ஈரானில் இடம்பெற்ற ஒரு விமான விபத்தில் 168 பேர் கொல்லப்பட்டனர்.


தொடர்புள்ள செய்திகள்

மூலம்