ஈரானிய எண்ணெய்க்கு தடைவிதிக்க ஐரோப்பிய ஒன்றியம் கொள்கை அளவில் ஒப்புதல்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

சனி, சனவரி 7, 2012

ஈரானின் அணுவாயுதச் செயற்பாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அதன் எண்ணெய் விற்பனைக்குத் தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையில் கொள்கை அளவில் ஒப்புதல் ஏற்பட்டுள்ளது.


சனவரி 30ம் திகதி நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டில் ஈரான் எண்ணெய்க்குத் தடைவிதிக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ள பிரான்சின் வெளியுறவு அமைச்சர் அலைன் ஜுப்பே, ஈரானிடம் எண்ணெய் கொள்வனவு செய்யும் ஐரோப்பிய நாடுகளுக்கு மாற்று வழிவகை செய்யப்பட்ட பின் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்;


ஈரான் தனது எண்ணெய் ஏற்றுமதியில் 17 வீதமானதை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு விற்பனை செய்கிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகள் ஈரானின் எண்ணெய்க்கு தடை விதித்தால் அவை தனது எண்ணெய் தேவைக்காக மாற்று ஆசிய நாடுகளை நாடவேண்டி ஏற்படும். இதே நேரம் இந்த தடையால் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்றும் அதற்கு பதிலாக மாற்று சந்தைகளை உருவாக்க முடியும் என்றும் ஈரான் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் எஸ்.எம். கம்சாரி குறிப்பிட்டுள்ளார்.


அணு ஆயுதம் தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக ஈரான் மீது மேற்கு நாடுகள் சுமத்தும் குற்றச்சாட்டை அது தொடர்ந்து மறுத்து வருகிறது. இதேவேளை, அணு ஆயுதங்கள் தயாரிப்பு விவகாரம் குறித்த பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேமன் பரஸ்ட் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் அளித்த பேட்டியொன்றில் ஐரோப்பிய ஒன்றிய கொள்கைப் பிரிவு தலைவர் கேத்ரீன் ஆஸ்டனின் திகதி மற்றும் இடம் குறித்த அறிவிப்புக்காக காத்திருக்கிறோம். அவரது அறிவிப்பு வெளியான உடன், ஈரான் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலர் ஜலீலி, தனது முடிவுகளை அறிவிப்பார் என்றார்.


ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய அறிவிப்பை தொடர்ந்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு