ஈராக்கின் முன்னாள் அமைச்சர் தாரிக் அசீசுக்கு மரணதண்டனை
வெள்ளி, அக்டோபர் 29, 2010
- 28 சனவரி 2017: ஏழு நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் அமெரிக்கா வர தடை விதித்து திரம்பு உத்தரவு
- 11 செப்டெம்பர் 2014: ஐ.எஸ் தீவிரவாதிகளை அழிக்க நாட்டோ படை நாடுகள் உடன்பாடு
- 23 சூலை 2014: ஈராக்கின் மோசுல் நகரில் 1,800 ஆண்டுகள் பழமையான கிறித்தவக் கோவில் தீயிடப்பட்டது
- 5 சூலை 2014: ஈராக்கில் கிளச்சியாளர்களிடம் மாட்டிக்கொண்ட இந்திய செவிலியர் விடுவிப்பு
- 22 சூன் 2014: சுணி இசுலாமியப் போராளிகள் இரு நாட்களில் ஈராக்கின் நான்கு நகரங்களைக் கைப்பற்றினர்
சதாம் உசேனின் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றிய தாரிக் அசீசுக்கு ஈராக்கின் உச்சநீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.
74 வயதுள்ள அசீஸ் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் உதவிப் பிரதமராகவும் சதாம் உசேனின் முக்கிய ஆலோசகராகவும் விளங்கியவர். இவர் தற்போது கடும் சுகவீனமுற்று இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. இவர் ஒரு கிறித்தவர் என்பது குறிபிடத்தக்கது.
சியா முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டது, சியா முஸ்லிம்களைக் கொலை செய்தது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டிருந்தன. இவர் முன்னர் வர்த்தகர்கள் பலரின் கொலைகளுக்கு உத்தரவிட்டார் என்ற குற்றச்சாட்டின் மீது தண்டனை வழங்கப்பட்டது.
இவருடம் முன்னாள் உள்துறை அமைச்சர் சடூன் சாக்கிர், சதாம் உசேனின் முன்னாள் செயலாளர் அபெட் அமூட் ஆகிய இருவருக்கும் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளதாக ஈராக்கின் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.
சுணி இசுலாம் பிரிவைச் சேர்ந்த சதாம் உசேன் 1980, 1990களில் எதிர்க்கட்சிகளை குறிப்பாக சியா முஸ்லிம் பிரிவினரை அடக்கி வைத்திருந்தார்.
அரசியல் காரணங்களுக்காகவே அசீசுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அவரின் வழக்கறிஞர் அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளருக்குத் தெரிவித்தார்.
அசீசின் மரணதண்டனைக்கு எதிராக வத்திக்கான் குரல் கொடுத்துள்ளது. அவருக்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
பக்தாத் போரின் பின்னர் 2003 ஆண்டில் அசீஸ் அமெரிக்கப் படையினரிடம் சரணடைந்தார். 42 ஈராக்கிய வர்த்தகர்களைக் கொலை செய்வதற்குக் கட்டளை இட்ட குற்றச்சாட்டின் பேரில் இவருக்கு மார் 2009 இல் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. குர்தியர்களை கட்டாயமாக வெளியேற்றியது தொப்டர்பாக மேலும் ஏழாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
கடந்த ஆகத்து மாதத்தில் த கார்டியன் செய்தித்தாளுக்கு வழங்கிய நேர்கானல் ஒன்றில், "சதாம் உசேன் எவ்வாறு தனது நாட்டுக்குச் சேவையாற்றினார் என்பதை வரலாறு உணர்த்தும்," எனக் கூறியிருந்தார். அத்துடன் அமெரிக்கப்படையினரைத் திரும்ப அழைக்கும் பராக் ஒபாமாவின் அறிவிப்பைக் குறை கூறினார். "ஈராக்கை நரிகளின் கைகளில் ஒப்படைக்கிறார்," எனக் கூறியிருந்தார்.
மூலம்
தொகு- Tariq Aziz, Iraqi ex-minister, sentenced to death, பிபிசி, அக்டோபர் 26, 2010
- Tariq Aziz sentenced to death, அல்ஜசீரா, அக்டோபர் 26, 2010