இலங்கை போர்க் குற்றம் குறித்து ஆராய பன்னாட்டு விசாரணை தேவை - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

வியாழன், ஆகத்து 27, 2009, நியூயோர்க், அமெரிக்கா:


இலங்கை படையினர் என்று கூறப்படுபவர்களால், தடுத்து வைக்கப்பட்டிருந்த சிலர் கொல்லப்படுவதாக குற்றஞ்சாட்டி அண்மையில் வெளியாகியிருக்கின்ற காணொளிக் காட்சிகள், இலங்கையில் இடம்பெற்றிருக்கக் கூடிய போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு ஆணைக்குழு ஒன்றின் விசாரணை அவசியம் என்பதை கோடி காட்டுவதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) அமைப்பு கூறியிருக்கிறது.


இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐ.நா.சபை மனித உரிமை கண்காணிப்பக இயக்குநர் ஸ்டீவ்கிராசங், "இந்த வீடியோ காட்சியை பார்க்கும் போது அங்கு நடக்கும் போர் அத்து மீறல்கள் தெளிவாக தெரிகின்றன. ராஜபக்சே போர் குற்றங்கள் எதுவும் நடக்கவில்லை என்று கூறுவது முட்டாள் தளமான வாதம். எனவே இது குறித்து அனைத்துலகக் குழு விசாரணை நடத்த வேண்டும். அங்கு ஆராம்பம் முதல் கடைசி வரை என்ன நடந்தது என்பது விசாரிக்கப்பட வேண்டும். இலங்கை ராணுவம், புலிகள் இரு தரப்பினரும் செய்த தவறுகளும் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும்," என்றார்.


கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்த இரு தரப்புக்கும் இடையிலான போரின் போது இரு தரப்பினாலும், போர் சட்டங்கள் மீறப்பட்டதாக முறைப்பாடுகள் பல வந்தாலும், அங்கு சுயாதீன கண்காணிப்பாளர்கள் எவரும் செல்ல அனுமதிக்கப்படாத நிலை காரணமாக அவை குறித்த உறுதியான தகவல்களை பெறமுடியாது இருந்து வந்துள்ளது என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


ஆகவே இரத்தக்களரி மிகுந்த இலங்கை போரில் இடம்பெற்ற குற்றங்கள் குறித்து ஆராய சுதந்திரமான பன்னாட்டு விசாரணை ஆணையம் ஒன்று தேவை என்றும் அது வலியுறுத்தியுள்ளது.


இதற்கிடையே, ஊடகங்களில் வெளியான இந்த வீடியோ ஒளிக்கீற்று போலியானது என்று மீண்டும் மறுத்திருக்கின்ற இலங்கை அரசாங்கம், இது குறித்த செய்தியை முதலில் வெளியிட்ட இங்கிலாந்தின் சனல் 4 நிறுவனத்துக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கத்திடம் முறைப்பாடு செய்யப்போவதாக கூறியுள்ளது.


இது குறித்து இராஜதந்திர ரீதியிலான முறையான கண்டனத்தை பிரித்தானிய அரசாங்கத்திடம் தெரிவிக்கவிருப்பதாக இலங்கையின் அமைச்சரவைப் பேச்சாளரான அநுர பிரிய தர்சன யாப்பா அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் இந்த வீடியோ விவகாரம் குறித்து லண்டன் பிபிசி தொலைக்காட்சி இந்திய வெளியறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை தொடர்பு கொண்டு கருத்துகேட்டதாக இந்திய தகவல் சாதனங்கள் தெரிவித்துள்ளன.

"ஈழத்தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக வெளியான தொலைக் காட்சி ஒளிபரப்பு குறித்து இந்திய அரசு அதிக கவனம் செலுத்தி உள்ளது. இது பற்றி முழுமையாக விசாரிக்கப்படும். மத்திய வெளியுறவு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர உத்தரவிடப் பட்டுள்ளது," என்று இந்திய அமைச்சர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இலங்கையில் தமிழர் களைக் கொடூரமான முறையில் ராணுவ வீரர்கள் கொல்கிறார்கள் என்று சொல்லி இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோ காட்சி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த காணொளி 2009 ஜனவரியில் இலங்கை படைவீரர் ஒருவரால் தமது கையடக்க தொலைபேசி மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இளைஞர்கள் அழைத்து வரப்பட்டு இலங்கை படையினரால் சுட்டுகொல்லப்படும் காட்சிகள் காண்பிக்கப்பட்டுள்ளன.


மூலம்

தொகு