இலங்கையில் இன அடிப்படையிலான கட்சிப் பெயர்களை நீக்க முனையும் சட்டத்திருத்தம் நிராகரிப்பு

செவ்வாய், செப்டம்பர் 8, 2009, கொழும்பு:


இலங்கையில் அரசியல் கட்சிகளின் பெயர்கள் மதம், இனம் போன்றவற்றின் அடிப்படையில் அமைந்துள்ளதை நீக்கக் கோரும் தேர்தல் சட்ட திருத்தம் அரசியலமைப்புக்கு முரணானது என்று இலங்கை உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் டபிள்யு. ஜே.எம்.லொக்குபண்டார நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


இந்த சட்டமூலத்தை ஏற்றுக்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டுபங்கு பெரும்பான்மை வாக்குகள் பெற வேண்டும் என்றும் சர்வசன வாக்கெடுப்பின் மூலம் அதற்கு ஆணை பெற வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவிப்பதிருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.


1981 ஆம் ஆண்டு முதலாம் இலக்க நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் என்ற பெயரில் ஆகஸ்ட் 6 ஆம் திகதி மேற்படி திருத்த சட்டமூலத்தை பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.


ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், லங்கா சம சமாஜ கட்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோர் உயர்நீதிமன்றத்தில், இந்த சட்டமூலம் அரசமைப்பு ஏற்பாடுகளுக்கு முரணானது என தெரிவித்து அந்த சட்டமூலத்தை ஆட்சேபித்து தனித்தனியாக வழக்குகள் தொடுத்திருந்தனர்.

மூலம் தொகு