இரண்டாவது மிகச் சிறிய புறக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது
வெள்ளி, சனவரி 15, 2010
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 23 பெப்பிரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- 15 பெப்பிரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது
- 26 திசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது
நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே பூமியை விட நான்கு மடங்கு திணிவுடைய புறக்கோள் (extrasolar planet) ஒன்றை கலிபோர்னியா தொழிநுட்பக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த வானியலாளர்கள் ஹவாயில் மவுனா கியா என்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ள 10 மீட்டர் நீள "கெக் 1" என்ற அதிஉணர்வுத் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளதாக் அறிவித்துள்ளனர். இக்கோள் HD 156668 என்ற தனது தாய்-விண்மீனை நான்கு நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது.
ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ள 400 இற்கும் அதிகமான புறக்கோள்களில் இது இரண்டாவது மிகச் சிறியதாகும். இதற்கு முன்னர் பூமியை விட 1.94 மடங்கு கிளீசு 581 e என்ற புறக்கோள் 2009, ஏப்ரல் 21 இல் கண்டுபிடிக்கப்பட்டது. புதிய புறக்கோள் பூமியில் இருந்து ஏறத்தாழ 80 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
2010, ஜனவரி 7 ஆம் நாள் கண்டுபிடிக்கப்பட்ட இப்புறக்கோளுக்கு HD 156668b எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் இருந்து பல உண்மைகளைக் கண்டறிய முடியும் என அறிவியலாளர்கள் நம்புகின்றனர். சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரத்திற்கு அண்ணளவாக இப்புறக்கோளும் அதன் சூரியனும் இருப்பதால் இதில் உயிரினம் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளும் இருப்பதாகக் கருதப்படுகிறது.
"பூமியை ஒத்த கோளின் கண்டுபிடிப்பு காரணமாக இது குறித்து மேலும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு இன்னும் நிறைய வேலை உண்டு", என கால்ட்டெக்கின் வானியலாளர் ஜோன் ஜோன்சன் தெரிவித்தார். இவர் பெர்க்லி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அண்ட்ரூ ஹவார்ட், ஜெஃப் மார்சி, பென்சில்வேனியா மாநிலப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேசன் ரைட், யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டெப்ரா பிஷர் ஆகியோருடன் இணைந்து இப்புறக்கோளக் கண்டுபிடித்தார்.
"மிகத் திறமையான சுற்றுவட்ட-வேகக் கருவி ஒன்றை நாளையே உருவாக்கினால், இன்னும் மூன்றாண்டுகளில் இதற்கான விடை கிடைக்கும். இன்னும் பத்தாண்டுகளில் பூமியை ஒத்த கோள்களின் மொத்தத் தொகையையும் நாம் அறியக்கூடியதாக இருக்கும்."
கெக் I (Keck I) தொலைக்காட்டி கெக் அவதானநிலையத்தின் ஒரு பகுதியாகும். இது கால்டெக் மற்றும் கலிபோர்னியா ப்ல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஓரு கூட்டுத் தயாரிப்பாகும்.
மூலம்
தொகு- Second smallest exoplanet spotted: Discovery highlights new potential for eventually finding Earth-mass planets, ScienceDaily. சனவரி 14, 2010
- Second smallest exoplanet found to date discovered at Keck, keckobservatory.org