இயக்குனர் ஜேம்ஸ் கேமரன் பெருங்கடலின் மிக ஆழமான பகுதிக்குத் தனியாளாகச் சென்று திரும்பினார்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

திங்கள், மார்ச்சு 26, 2012

கனடாவைச் சேர்ந்த ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரன் உலகின் மிக ஆழமான கடற்பகுதியான மேற்குப் பசிபிக்கில் உள்ள மரியானா அகழியின் அடிப்பகுதிக்குத் தனியொரு ஆளாகச் சென்று திரும்பி சாதனை படைத்தார்.


ஜேம்ஸ் கேமரன்
மரியானா அகழி

டீப்சீ காலஞ்சர் (Deepsea Challenger) என்ற நீர்மூழ்கிக் கப்பலில் 11 கிமீ ஆழத்தைச் செல்லுவதற்கு இவருக்கு 2 மணித்தியாலத்திற்கும் அதிகம் பிடித்திருக்கிறது. இன்று திங்கட்கிழமை உள்ளூர் நேரம் காலை 07:52 மணிக்கு மரியானா அகழியின் ஆழத்தை இவர் அடைந்தார். மூன்று மணி நேரம் கடல் நிலத்தை ஆராய்ந்து விட்டு கேமரன் மேலே திரும்பினார். படம்பிடிக்கும் கருவிகள், மற்றும் விளக்குகளுடன் சென்ற அவர் நிலத்தை விரிவாக ஆராய்ந்து காணொளிப் படங்களும் எடுத்து வந்துள்ளார். இவற்றை வைத்து ஆவணப் படம் ஒன்றை வெளியிடுவதற்கு இவர் திட்டமிட்டுள்ளார்.


பெருங்கடலின் மிக ஆழமான பகுதியை மனிதர் அடைவது இது இரண்டாவது தடவையாகும். 1960 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த லெப். டொன் வால்சு, மற்றும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெருங்கடல் குறிப்பு வல்லுநர் சாக் பிக்கார்ட் ஆகியோர் சென்றிருந்தனர். இவர்கள் 20 நிமிடங்கள் கடல் ஆழத்தில் கழித்தனர்.


டீப்சீ சாலஞ்சர் கப்பல் ஆத்திரேலியாவில் நிர்மாணிக்கப்பட்டது. இது 11 தொன் நிறையும், 7 மீட்டர் நீளமும் கொண்டது. கடலடியில் 1,000 வளிமண்டல அமுக்கத்தைச் சமாளிப்பதற்காக தடித்த எஃகினால் ஆன சிறிய அறை ஒன்றில் ஜேம்ஸ் கேமரன் தங்கியிருந்தார். கடலடியில் இருந்து பாறைகளையும், மண்களையும் சேகரிக்க தானியங்கிகளும் கப்பலில் இணைக்கப்பட்டிருந்தன.


1995 ஆம் ஆண்டில் சப்பானி கைக்கோ என்ற ஆளில்லா கப்பல் மரியானா அகழிக்குச் சென்று திரும்பியது. பின்னர் 2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நீரியசு என்ற ஆளில்லா கப்பலும் சென்று திரும்பியிருந்தது.


10,924 மீட்டர்கள் ஆழமான மரியானா அகழி பசிபிக் பெருங்கடலில் மரியானா தீவுகளுக்குத் தெற்கிலும், கிழக்கில் குவாமுக்கு அருகில் அமைந்துள்ளது.


மூலம்

தொகு