இன்கா காலத்துக்கு முன்னர் பலியிடப்பட்ட 44 குழந்தைகளின் உடல்கள் பெருவில் கண்டெடுக்கப்பட்டன

திங்கள், நவம்பர் 21, 2011

600 முதல் 700 ஆண்டுகளுக்கு முன்னர் பலி கொடுக்கப்பட்டதாகக் கருதப்படும் 44 குழந்தைகளின் உடல்களை பெருவின் சில்லுஸ்தானி தொல்லியல் இடத்தில் தாம் கண்டெடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இவ்விரண்டு உடல்களாக கூடைகளில் போடப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இக்குழந்தைகள் அனைத்து மூன்று வயதுக்குள்ளேயே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


இவைகள் அனைத்தும் இன்கா நாகரிகத்துக்கு முன் கிபி 1200 முதல் 1450 ஆண்டு காலப்பகுதியில் பெருவின் தெற்குப் பிராந்தியமான பூனோ என்ற பகுதியை ஆண்டு வந்த கொல்லா மக்களுடையதென தொல்லியலாளர்கள் நம்புகின்றனர்.


அனைத்து உடல்களிலும் அவர்களின் மார்புப் பகுதியில் எரிமலைக் கல் ஒன்று கட்டப்பட்டு, உடல்களைச் சுற்றி அவற்றுக்கான காணிக்கைப் பொருட்களும் காணப்படுகின்றன. இவற்றில் மிருகங்கள், உணவு, தட்டுகள், மற்றும் குடங்கள் போன்றவையும் அடங்குவதாக தொல்லியலாளர் எதுவார்தோ அரிசாக்கா தெரிவித்தார்.


கொல்லா மக்களுக்கும் அவர்களின் எதிர் நாகரிக மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலவரங்களின் போது இக்குழந்தைகள் பலியிடப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


கிட்டத்தட்ட 200 பேரின் உடல்கள் சில்லுஸ்தானி என்ற இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. சில்லுஸ்தானி தலைநகர் லீமாவில் இருந்து தென்கிழக்கே 1,300 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.


மூலம் தொகு