இந்தோனேசியாவில் 7.1 அளவு நிலநடுக்கம், மூவர் உயிரிழப்பு

புதன், சூன் 16, 2010


இந்தோனேசியாவில் இடம்பெற்ற தொடர் நிலநடுக்கங்களின் தாக்கத்தினால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்தோனேசியாவின் பப்புவா மாகாணம் (பச்சை)

மிகப் பெரும் நிலநடுக்கம் கிழக்கு இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் இடம்பெற்றதாக அந்நாட்டின் நிலநடுக்க மையம் அறிவித்துள்ளது. இங்கு 7.1 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவாகியது.


இம்மாகாணத்தில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பப்புவா மாகாணம் இந்தோனேசியாவின் மிகவும் பின்தங்கிய பிரதேசம் ஆகும்.


சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு, பின்னர் திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது.


முதலாவது 6.4 அளவு நிலநடுக்கம் கிரீனிச் நேரம் 0306 மணிக்கு பப்புவாவின் யாப்பென் தீவுக் கடலில் பதிவாகியது. இங்கு கிட்டத்தட்ட 70,000 பேர் வாழ்கிறார்கள்.


10 நிமிடங்களின் பின்னர் 7.1 அளவு நிலநடுகக்ம் பப்புவாவின் வடக்குக் கரைக் கடலில் 29கிமீ ஆழத்தில் இடம்பெற்றது என ஐக்கிய அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் அறிவித்தது.


யாப்பென் தீவில் 47 வயது பெண் ஒருவரும் 5 மாதக் குழந்தையும் அவர்களது வீடு இடிந்து வீழ்ந்ததால் உயிரிழந்தனர். குறைந்தது 20 வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதாக யாப்பென் தீவுக் காவல்துறை அதிகாரி ஒருவர் பிபிசி செய்தியாளருக்குக் கூறினார்.


மெற்கு சுலவேசி மாகாணத்தில் 5.3 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார்.


கடந்த சில ஆண்டுகளாக இந்தோனேசியாவில் பல நிலநடுக்கங்கள் நிகழ்ந்துள்ளன. 2009 செப்டம்பரில் சுமாத்திராவில் இடம்பெற்ற நடுக்கத்தில் 1,000 பேர் உயிரிழந்தனர்.


டிசம்பர் 2004 இல் 9.1-அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 13 நாடுகளில் ஒரு மில்லியன் மக்கள் வரை உயிரிழந்தனர்.

மூலம்

தொகு