ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் பாதிப்பு

வியாழன், சூலை 30, 2009, மெல்பேர்ண், ஆஸ்திரேலியா:

மெல்பேர்ணில் இந்திய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


ஆஸ்திரேலியாவுக்கு படிக்க விண்ணப்பிக்கும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி இருக்கக்கூடும் என்பதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் தென்படுவதாக, ஆஸ்திரேலிய உயர் கல்வி அதிகாரிகள் கூறுகிறார்கள்.


மாணவர்கள் மீது தொடுக்கப்பட்ட இனரீதியான தாக்குதல்கள், சில கல்லூரிகள் மூடப்பட்டது, குடியேற்ற விவகாரத்தில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முகவர்கள் விஷயத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டது போன்றவை உருவாக்கிய மோசமான விளம்பரம் ஆகியவைகளை அடுத்து இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.


ஆஸ்திரேலிய அரசாங்கம் குடிநுழைவு தொடர்பான நடவடிக்கைகளைக் கடுமையாக்கியுள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவில் படிக்கும் இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான புதிய விதிமுறைகளை சமாளிக்க முடியாத சில தனியார் கல்லூரிகள் மூடப்படும் நிலையில் உள்ளன.


இதனால் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் வாய்ப்புகளை இழக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆஸ்திரேலிய கல்விக் குழுவினர் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்படுவதைத் தடுத்து நிறுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் குடியேற்றம் தொடர்பான விதிமுறைகளை கடுமையாக்கியிருப்பதாக ஆஸ்திரேலிய கல்வி அமைச்சர் ஜூலியா ஜிலர்டு கூறினார்.


புதிய விதிமுறைகளைச் சமாளிக்க முடியாத பல தனியார் கல்லூரிகள் ஏற்கனவே மூடப்பட்டதால் அந்த கல்லூரிகளில் படித்த வெளிநாட்டு மாணவர்கள் 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள். இந்த எண்ணிக்கை 5,000 ஐ எட்டக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய மாணவர்களைக் குறிவைத்து தாக்கப்படுவது போன்ற நிகழ்ச்சியை ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்பியதை யடுத்து முறைகேடாக நடந்து கொள்ளும் சில குடிநுழைவு முகவர்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


மூலம்