ஆவர்த்தன அட்டவணையின் 119வது தனிமத்தைத் தொகுக்க உருசிய இயற்பியலாளர்கள் திட்டம்

ஞாயிறு, மார்ச்சு 27, 2011

ஆவர்த்தன அட்டவணையின் 119வது தனிமத்தைக் கண்டுபிடிக்க உருசியாவின் தூப்னாவில் உள்ள அணு ஆய்வுக்கான கூட்டு நிறுவனம் முயன்று வருவதாக அந்நிறுவனத்தின் அணுக்கருத் தாக்க ஆய்வுகூடத்தின் தலைவர் செர்கே திமீத்ரியெவ் தெரிவித்துள்ளார்.


தனிம அட்டவணை

"அமெரிக்காவின் லிவர்மோர் மற்றும் பேர்க்லி ஆய்வுகூடங்களைச் சேர்ந்த ஆய்வாளர்களுடன் இணைந்து மென்டலீவின் ஆவர்த்தன அட்டவணையின் 119வது மூலகத்தைத் தொகுக்கும் முதலாவது சோதனைகளை நாம் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறோம்," என திமீத்ரியெவ் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் தெரிவித்தார். தூப்னா நகரம் மாஸ்கோவில் இருந்து 125 கிமீ தொலைவில் உள்ளது.


"118வது தனிமம் அட்டவணையின் கடைசித் தனிமம் அல்ல என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம்," என அவர் கூறினார்.


கண்டுபிடிக்கப்படவிருக்கும் 119வது தனிமத்துக்கு யுனுனேனியம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் இயல்புகள் பிரான்சியம் அல்லது சீசியத்தின் இயல்புகளை ஒத்ததாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஏற்கனவே பல தடவைகள் இத்தனிமத்தைத் தொகுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.


யூனுநோக்டியம் என்ற 118வது தனிமம் 2006 அக்டோபரில் தூப்னாவில் தொகுக்கப்பட்டது. மொத்தம் 6 தனிமங்கள் இந்த ஆய்வு நிறுவனத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. தற்போது இந்நிறுவனம் தனது 55வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.


மூலம் தொகு