ஆப்பிரிக்க நாய்களில் கிழக்காசிய நாய்களின் மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன
சனி, ஆகத்து 15, 2009, நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா:
நாய்கள் எவ்வாறு வளர்ப்பு நாய்களாக மாறின? நாய்களின் படிவளர்ச்சியில் எப்படி இது ஒரு தனிப் பேரினமாக வளர்ச்சியுற்றது எனப் பல கேள்விகள் அண்மையில் எழுந்துள்ளன.
வீட்டு நாயாக பழக்கப்படுத்தாமல், உலகில் பல்வேறு சிற்றூர்களில் திரியும் பல நாய்களின் மரபணுக்களை அலசியபொழுது புதிதாக நுழைந்த மரபணுக்களும், இயற்கையாக இருந்த மரபணுக்களும் கலந்து இருப்பதை அண்மையில் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.
இக்கண்டுபிடிப்பை ஐக்கிய அமெரிக்காவில் நியூயார்க் மாநிலத்தில் உள்ள இத்தாக்காவில் உள்ள கார்ணெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆடம் பாய்க்கோ (Adam Boyko) என்பவர் செய்தார்.
இவர் ஆப்பிரிக்காவில் ஏழு வெவ்வேறு இடங்களில் இருந்து 318 நாய்களின் இழைமணி கரு டி.என்.ஏவை (மைட்டோகோண்டிரியல் நியூக்கிளியர் டி.என்.ஏ) திரட்டி எடுத்து கரிபியன் தீவுகளுக்கு அருகே உள்ள புவேர்ட்டோ ரிக்கோவில் உள்ள தெரு நாய்கள், அமெரிக்காவின் மட் (mutt) எனப்படும் கலப்பு இன நாய்கள், மற்றும் 126 வகையான ஏற்புபெற்ற தனி நாய் இனங்கள் ஆகியவற்றின் இழைமணி கரு டி.என்.ஏக்களோடு ஒப்பிட்டு ஆய்ந்தார். இவ் ஆய்வின் பயனாக ஆப்பிரிக்காவில் உள்ள நாய்கள் கூட கிழக்கு ஆசியாவில் உள்ள நாய்களின் வழித்தோன்றலாக இருக்ககூடும் என்னும் கருத்து வலுப்படுகின்றது என்கிறார்கள்.
மூலம்
தொகு- Proc. Natl Acad. Sci. USA doi:10.1073/pnas.0902129106 (2009)
- Complex population structure in African village dogs and its implications for inferring dog domestication history, Proceedings of National Academy of Science of United States of America