ஆப்பிரிக்காவில் புதிய பெருங்கடல் ஒன்று உருவாகிறது

This is the stable version, checked on 22 சூலை 2018. 1 pending change awaits review.

ஞாயிறு, சூன் 27, 2010



ஆப்பிரிக்கக் கண்டத்தில் புதிய பெருங்கடல் ஒன்று உருவாகிவருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது என ரோயல் அவையின் அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர்.


எத்தியோப்பியாவில் அஃபார் பிரதேசம்
அஃபார் பள்ளமும் அதன் தாக்கங்களும்

இந்தப் பெருங்கடல் காலப்போக்கில் ஆப்பிரிக்கக் கண்டத்தை இரு கூறுகளாகப் பிரிக்கும் என எத்தியோப்பியாவின் அஃபார் பகுதியில் பணியாற்றும் நிலவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இது இடம்பெற இன்னும் குறைந்தது 10 மில்லியன் ஆண்டுகள் எடுக்கும் என அவர்கள் கூறுகின்றனர்.


ரோயல் அவையின் கோடை கண்காட்சிக் கருத்தரங்கில் ஆய்வாளர் டிம் ரைட் என்பவர் இந்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்திருந்தார். அஃபார் பகுதியில் கட்ந்த 5 ஆண்டுகளில் வியக்கத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்து வருவதை இவரது ஆய்வுக்குழு கண்டறிந்துள்ளது.


2005 ஆம் ஆண்டில் 8 மீட்டர் அகல வெடிப்பு ஒன்று 60 கிமீ நீளத்தில் பத்து நாள் கால இடைவெளியில் தோன்றியது. மிகவும் சூடான உருகிய பாறைகள் பூமியின் அடியில் இருந்து மேலே கிளம்பி இந்த வெடிப்பை உண்டாக்குகின்றன.


தற்போதும் இடம்பெற்று வரும் உள்வெடிப்பு இறுதியில் ஆப்பிரிக்காவில் புதிய சமுத்திரத்தைத் தோற்றுவிக்கும்.

"அஃபார் பிரதேசத்தின் சில பகுதிகள் கடல் மட்டத்துக்குக் கீழே உள்ளன. அத்துடன் பெருங்கடல் எரித்திரியாவின் 20 மீட்டர் நிலப்பகுதி ஒன்றின் மூலமே பிரிக்கப்பட்டுள்ளது" என பிறிஸ்டல் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜேம்ஸ் ஹமண்ட் தெரிவித்தார். "இது படிப்படியாக விலகிச் செல்லும்" என அவர் பிபிசி செய்தியாளருக்குத் தெரிவித்தார். "கடல் நீர் உள்ளே புக ஆரம்பித்தவுடல் பெருங்கடலைத் தோன்றும்."


"தெற்கு எத்தியோப்பியா, சோமாலியா என்பன பிரிக்கப்பட்டு புதிய தீவை உருவாக்கும், இப்பிரிவு ஆப்பிரிக்காவை சிறியதாக்கும். மிகப் பெரும் தீவு ஒன்று இந்தியப் பெருங்கடலில் மிதக்கும்."


இப்பகுதியில் மேலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. இதன் மூலம் பூமியின் மேற்பரப்பு வடிவமைக்கப்பட்டமைக்கான காரணங்களை அறியக்கூடியதாக இருக்கும்.

மூலம்

தொகு