ஆப்கானிஸ்தானில் போராளிகளுடனான மோதலில் 8 அமெரிக்கப் படையினர் இறப்பு
ஞாயிறு, அக்டோபர் 4, 2009, காபூல்:
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e5/LocationAfghanistan.png/200px-LocationAfghanistan.png)
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள நூரிஸ்தான் மாநிலத்தில் அமைக்கப்ட்டிருந்த காவல் அரண்கள் மீது தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 8 அமெரிக்க ராணுவத்தினரும், 2 ஆப்கன் ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர்.
ஒதுக்குப்புறமான பலைப்பகுடி ஒன்றில் காவல் அரண்களுக்கு அருகில் இருந்த மசூதியிலிருந்தும், கிராமத்தில் இருந்தும் இரண்டு சிறிய இராணுவ நிலைகள் மீது தலிபான் தீவிரவாதிகள் 300 பேர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், காம்தேஷ் மாவட்டத்தில் காவல் துறையினர் 19 பேருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலின்போது அமெரிக்க இராணுவ விமானங்கள் குண்டுகள் வீசியதாகவும், விமானத் தாக்குதல் விடியற்காலையில் ஆரம்பித்து நெடுநேரம் தொடர்ந்தது எனவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். காவல்துறைத் தலைவர் ஒருவர் உட்பட உள்ளூர் அதிகாரிகள் நிறைய பேரை ஆயுததாரிகள் பிடித்துச் சென்றுள்ளனர்.
இத்தாக்குதலுக்கு தாலிபான்கள் உரிமை கோரியுள்ளனர். ஆப்கானிஸ்தான் மீது 2001ல்அமெரிக்கா படையெடுப்பு மேற்கொண்டதன் பின்னர், அங்கு வெளிநாட்டுப் படையினர் தரப்பில் அதிக சேதங்களை உண்டாக்கிய சம்பவங்களில் இதுவும் ஒன்று.
மூலம்
தொகு- "Heavy US losses in Afghan battle". பிபிசி, அக்டோபர் 4, 2009
- "தலிபான் தாக்குதல்: அமெரிக்க வீரர்கள் பலி". தமிழ் முரசு, அக்டோபர் 5, 2009
- "8 U.S. troops killed in battle with militants in Afghanistan". சிஎன்என், அக்டோபர் 4, 2009