ஆசியான் நாடுகளின் புதிய மனித உரிமை அமைப்பு
திங்கள், அக்டோபர் 26, 2009, தாய்லாந்து:
ஆசியான் தலைவர்கள் ஆசியானின் புதிய மனித உரிமைகள் அமைப்பை அறிவித்துள்ளனர். தாய்லாந்தில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் தாய்லாந்து பிரதமர் இதனை அறிவித்தார்.
மனித உரிமைகள் தொடர்பாக எவ்வித முயற்சியையும் எடுப்பதற்கு சக்தியற்ற அமைப்பாக அது விளங்கும் என்ற பலமான விமர்சனங்களுக்கு இடையே அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வட்டாரத்தில் மனித உரிமைகளை வலுப்படுத்த முக்கிய முதல்படியாக இந்த அமைப்பு அமையும் என்றார் தற்போது ஆசியான் தலைவரான தாய்லாந்து பிரதமர் அபிசித் வெஜஜீவா.
10 நாடுகள் அங்கம் வகிக்கும் ஆசியான் எனப்படும் தெற்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக இந்த அமைப்பு உருவாகியுள்ளது.
"இந்த அமைப்பு, ஆசிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அவர்களது உரிமைகளைப் பெருக்கவும் ஆசியானில் சமூக வளர்ச்சியில் அவர்களை ஈடுபடுத்தவும், உறுப்பு நாடுகளை கடப்பாடு கொள்ளச் செய்யும்," என்றார் ஆசியானின் தலைவர்.
இதற்கிடையே, ஆசியான் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி கேட்டிருந்த மனித உரிமை செயல்வீரர்களில் பத்தில் ஐவர் தடை செய்யப்பட்டுள்ளனர். ஆசியான் நாடுகளின் தலைவர்கள், இந்த சிவில் சமூக பிரதிநிதிகளைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எனினும் சிங்கப்பூர், மியன்மார், கம்போடியா, லாவோஸ், பிலிப்பீன்சு நாடுகளின் மனித உரிமை செயல்வீரர்கள் ஐவரைச் சந்திக்க ஆசியான் தலைவர்கள் மறுத்துவிட்டனர். மற்ற ஐவரும் மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் மாநாட்டில் பார்வையாளராக மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்றும் உரையாற்ற முடியாது என்றும் ஆசியான் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலம்
தொகு- "புதிய மனித உரிமைகள் அமைப்பை ஆசியான் தலைவர்கள் நிறுவினர்". தமிழ் முரசு, அக்டோபர் 24, 2009
- ASEAN Human Rights Body Inaugurated, But Activists Barred from Dialogue, வொயிஸ் ஓஃப் அமெரிக்கா, 23 அக்டோபர் 2009