அழைப்புகளை தன்வடிவ மாற்றத்தினால் உணர்த்தும் சுட்டிப்பேசி

செவ்வாய், ஏப்பிரல் 30, 2013


கனடாவின் ஒண்டாரியோ மாநிலத்தில் அமைந்துள்ள குயின்சு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் அலைபேசிகளில் வரும் அழைப்புகளை அமைதியாக அதிர்வுகளால் உணர்த்தும் தொழினுட்பங்களைப் போலல்லாமல், தனது வடிவத்தை மாற்றம் செய்து உணர்த்தும் MorePhone என அழைக்கப்படும் சுட்டிப்பேசி (நுண்ணறிபேசி) ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.


பிளாசிசுடிக் லாட்சிக்கு என்ற ஐக்கிய நாடுகள் நிறுவனம் வடிவமைத்த இந்த சுட்டிப்பேசி மெலிதான நெகிழ்வுக் கூழ்ம மின்பிரிகை படங்காட்டிகளால் (electrophoretic display) உருவக்கியுள்ளனர்.


இந்த படங்காட்டிக்கு உள்ளே பல்வேறு வடிவ நினைவக உலோகக்கம்பிகள் உள்ளன. பேசியானது பயனர்களுக்கு குறிப்புகாட்ட முற்படும் பொழுது, இந்த கம்பிகள் சுருங்கக்கூடியவை. இந்த பேசி தனது முழு வடிவம் அல்லது மூன்று முனைகளில் சுருங்கக்கூடியவை. குறுங்செய்தி, அழைப்பு அல்லது மின்னஞ்சல் போன்ற நினைவூட்டல்களுக்கு இந்த வடிவமாற்றம் பயன்படுகிறது.


பயனர்கள் ஒவ்வொரு நினைவூட்டலுக்கும் ஒரு முனையின் வடிவமாற்றத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். உதாரணமாக, குறுஞ்செய்திக்கு ஒரு முனையும், மின்னஞ்சலுக்கு ஒரு முனையும், அழைப்புகளுக்கு மூன்று முனைகளும் சுருங்கும்படி. சில மிக முக்கிய பயன்பாட்டிற்கு, முனைக்களை தொடர்ந்து மேலும் கீழுமாக அசையும்படியும் கூட அமைக்கலாம்.


குயின்சு பல்கலைக்கழகத்தின் மனித ஊடக ஆய்வக இயக்குனர் ரொயெல் வெர்ட்டிகால் "மனித தொடர்புகளுக்கான மெல்லிய நெகிழ்வு படங்காட்டி தொழினுட்பத்தில் இது அடுத்தக்கட்ட முயற்சி" என கூறினார். MorePhone கள் இன்னும் ஐந்து முதல் 10 ஆண்டுகளில் பரந்த அடிப்படையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முன்னோடித் திட்டத்தை குயின்சு பல்க்கலைக்கழக ஆய்வாளர்கள் பாரிசில் தற்போது நடைபெறும் கணினியியலில் மனித திறன்சார்புகள் குறித்த ACM CHI 2013 மாநாட்டில் நேற்று ஏப்ரல் 29 அன்று முன்வைத்துள்ளார்கள்.


மூலம் தொகு