அமெரிக்க செனட்டர் எட்வர்ட் கென்னடி காலமானார்

புதன், ஆகத்து 26, 2009

செனட்டர் டெட் கென்னடி (1932-2009)


அமெரிக்க அரசியலில் பெரும் செல்வாக்குடன் இருக்கும் கென்னடி குடும்பத்தைச் சேர்ந்த ஐக்கிய அமெரிக்க மேலவை உறுப்பினர் (செனட்டர்) டெட் கென்னடி நேற்று நள்ளிரவு, 2009, ஆகஸ்ட் 25 செவ்வாய்க்கிழமை தனது மசாசுச்செட்ஸ் வீட்டில் மரணமானார். மக்களட்சிக் கட்சியைச் சேர்ந்த இவர் இறக்கும் போது வயது 77. இவர் அமெரிக்க ஜனாதிபதிகளில் அதிக செல்வாக்குப் பெற்ற ஜனாதிபதி என்று பெயரெடுத்த ஜோன் எப். கென்னடி, மற்றும் செனட்டர் ராபர்ட் எஃப். கென்னடி ஆகியோரின் சகோதரர் ஆவார்.


அவருக்கு மூளையில் புற்று நோய் இருப்பது மே 20, 2008 இல் கண்டுபிடிக்கப்பட்டது.

பெப்ரவரி 22, 1932 இல் பிறந்த கென்னடியின் இயற்பெயர் எட்வர்ட் மூர் கென்னடி. மேலவை உறுப்பினராக 1962 ஆம் ஆண்டில் இருந்து இறக்கும் வரை இருந்து வந்தவர். அமெரிக்க வரலாற்றில் அதிக செல்வாக்குடன் நீண்ட காலமாக செனட்டராகப் பணியாற்றிய பெருமை இவருக்குண்டு.


கென்னடி குடும்பத்தில், ஜனாதிபதியாக இருந்த ஜோன் எப். கென்னடி 1963ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இன்னொரு சகோதரர் ரொபர்ட் கென்னடியும் 1968ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றைய சகோதரர் ஜோசப் கென்னடி இரண்டாம் உலகப் போரின் போது விமானவிபத்தில் இறந்தார்.


கென்னடிக்கு விக்டோரியா ரெஜி கென்னடி என்ற மனைவியும், 5 பிள்ளைகளும், ஜீன் கென்னடி சிமித் என்ற சகோதரியும் உள்ளனர்.

மூலம் தொகு