அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்றை ஈரான் கைப்பற்றியது

செவ்வாய், திசம்பர் 4, 2012

ஐக்கிய அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்றை வளைகுடாப் பகுதியின் வான் பரப்பில் தாம் கைப்பற்றியிருப்பதாக ஈரானிய இராணுவம் அறிவித்துள்ளது. இந்த அறிக்கையைத் தாம் ஆராய்ந்து வருவதாக அமெரிக்கா கூறியுள்ளது.


அமெரிக்காவின் ஸ்கேன்ஈகிள் என்ற சிறிய ரக விமானத்தைத் தாம் வீழ்த்தியிருப்பதாக ஈரானின் புரட்சிப் பாதுகாப்புப் படை தெரிவித்திருக்கிறது. கடந்த சில நாட்களாக இந்த ஆளில்லா விமானம் பல உளவுப் பயணங்களை மேற்கொண்டிருந்ததாக ஈரானிய இராணுவத்தைச் சேர்ந்த அலி பதாவி கூறியுள்ளார். இவ்வகையான விமானங்கள் பெரும் போர்க்கப்பல்களில் இருந்தே ஏவப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.


ஸ்கேன்ஈகிள் என்ற இவ்விமானத்தின் இறக்கைகளுக்கிடத் தூரம் 10 அடிகள் (3 மீ) மட்டுமே. போயிங் நிறுவனத்தின் இன்சிட்டு (Insitu) என்ற உபரி நிறுவனம் இந்த குறைந்த செலவிலான, நீண்ட காலம் பாவிக்கக்கூடிய விமானங்களைத் தயாரித்து வருகிறது.


கடந்த மாதம் தனது உளவு விமானம் ஒன்றைப் பன்னாட்டு வான்பரப்பில் ஈரானியப் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியதாகக் குற்ரம் சாட்டியிருந்தது. ஆனால், இவ்விமானம் தமது வான்பரப்பினுள் நுழைந்ததாக ஈரான் கூறியிருந்தது.


மூலம் தொகு