அபுதாபியில் பணம் போட்டுத் தங்கம் பெறும் இயந்திரம் நிறுவப்பட்டது

வெள்ளி, மே 14, 2010

காசு போட்டால் தங்கம் கொடுக்கும் இயந்திரம் ஒன்று உலகில் முதற்தடவையாக அமீரகத் தலைநகர் அபுதாபியில் நிறுவப்பட்டுள்ளது. அபுதாபியின் முன்னணி உணவு விடுதியான எமிரேட்ஸ் பலஸ் விடுதியில் இந்த இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.


வெளிப்பக்கம் முழுவதும் தங்கத்தினால் முலாமிடப்பட்டுள்ள இந்த இயந்திரம் 10 கிராம் வரை எடையுள்ள தங்கச் சவரன்கள், மற்றும் காசுகள் உட்பட மொத்தம் 320 வகை அசல் 24 கரட் தங்கங்களைக் கொடுக்கவல்லது.


இந்தத் தங்க இயந்திரம் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை உலக தங்க நிலவரங்களை அதனுடன் பொருத்தப்பட்டுள்ள கணினி மூலம் அறிந்து அதே விலைக்கு தங்கத்தைத் தருமாறு இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது.


தற்போது உள்ளூர் டிராம் காசுகளையே இந்த இயந்திரம் ஏற்கிறது. பின்னாளில் இது கடன் அட்டைகளையும் ஏற்றுக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


ஜெர்மனியின் தொழில் முனைவரான தாமஸ் கீஸ்லர் (Thomas Geissler) இவ்வியந்திரத்தை வடிவமைத்துள்ளார்.


"முதல் நாளிலேயே இதற்குப் பெரும் வரவேற்பு இருந்தது," என கீஸ்லர் கூறினார். "ஒரு வாடிக்கையாளர் இயந்திரத்தில் உள்ள அனைத்து வகைத் தங்களில் ஒவ்வொன்றை முதல் நாளில் வாங்கினார்."


"அனைத்து தங்கங்களும் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும்," என அவர் கூறினார்.


அண்மைக்காலங்களில் தங்கத்தின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்திருக்கிறது. தற்போது ஒரு அவுன்ஸ் $1,236 (£837) ஆக விற்கப்படுகிறது.

மூலம் தொகு