மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு: அரசுத்தலைவர் பொசீசே போராளிகளுடன் கூட்டரசு அமைக்க உறுதி

திங்கள், திசம்பர் 31, 2012

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இருந்து ஏனைய செய்திகள்
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அமைவிடம்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் போராளிகள் தலைநகர் பாங்குயி நோக்கி முன்னேறி வருவதை அடுத்து, போராளிகளுடன் கூட்டரசு அமைக்க அந்நாட்டின் அரசுத்தலைவர் பிரான்சுவா பொசீசே உறுதியெடுத்துள்ளார்.


ஆப்பிரிக்க ஒன்றியத் தலைவர் தொமசு போனியாயி உடனான பேச்சுக்களை அடுத்தே பொசீசே இவ்வாறு அறிவித்துள்ளார். காபொனில் போராளிகளுடனான பேச்சுக்கள் ஆரம்பிக்கும் எனவும், 2016 ஆம் ஆண்டில் தமது பதவிக்காலம் முடிந்தவுடன் தாம் அரசுத்தலைவர் பதவியை விட்டு விலகிவிடுவதாகவும் கூறியுள்ளார்.


அரசுத்தலைவரின் இந்தக் கோரிக்கையைத் தாம் பரிசீலிக்க விருப்பதாக போராளிகள் அறிவித்துள்ளனர். அரசைக் கைப்பற்றுவது தமது நோக்கமல்ல என்றும், பேச்சுக்களின் முடிவைத் தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் போராளிகளின் பேச்சாளர் எரிக் மாசி தெரிவித்தார். சனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றத்தை விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


போராளிகள் முன்னேறி வருவதை அடுத்து, அரசுப் படையினர் தலைநகரில் இருந்து 75 கிமீ தொலைவில் உள்ள டமாரா நகரைக் கைவிட்டு வெளியேறியுள்ளனர். இதற்கிடையில், பொசீசேயின் செல்வாக்கு அரசியல் ரீதியிலும், இராணுவ ரீதியிலும் வீழ்ந்து வருவதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். முன்னதாக, செலேக்கா போராளிகள் கூட்டணி சிபூட் நகரை வெள்ளியன்று கைப்பற்றினர்.


நூற்றுக்கும் மேற்பட்ட பிரெஞ்சுப் படையினர் தலைநகருக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனாலும், தமது பிரெஞ்சுக் குடிமக்களைப் பாதுகாக்கவே படையினர் அங்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அரசைப் பாதுகாக்கவல்ல என்றும் பிரான்சிய அரசு தெரிவித்துள்ளது.


ஐக்கிய நாடுகள் அமைப்பு தமது அனைத்து வெளிநாட்டுப் பணியாளர்களையும் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. அமெரிக்கா தனது தூதரகத்தை மூடியுள்ளது.


2007 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அமைதி உடன்பாட்டை அரசுத்தலைவர் பொசீசே புறக்கணித்து விட்டதாக மூன்று போராளிக் குழுக்களின் கூட்டமைப்பான செலேக்கா குற்றம் சாட்டியுள்ளது. இவர்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தை ஒரு மாதத்திற்கு முன்னர் ஆரம்பித்திருந்தனர். பல முக்கிய நகரங்களை அவர்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.


மூலம் தொகு