சிரியா கலவரங்களில் 90 பேர் உயிரிழப்பு, பலர் காயம்

சனி, ஏப்பிரல் 23, 2011

சிரியாவில் நேற்று வெள்ளிக்கிழமை பஷர் அல்-அசாத்தின் ஆட்சிக்கு எதிராக இடம்பெற்ற பெரும் ஆர்ப்பாட்டங்களின் போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டு மேலும் 80 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.


கடந்த ஐந்து வாரங்களாக இடம்பெற்று வரும் அரசுக்கெதிரான கிளர்ச்சிகளில் நேற்றைய நிகழ்வே மிகப் பெரியதென அவதானிகள் கருதுகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் நேற்று சிரியாவின் நகர வீதிகளில் இறங்கி அல்-அசாத்தைப் பதவியில் இருந்து விலகுமாறு கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வாரமே நாட்டில் 48 ஆண்டுகளாக அமுலில் இருந்த அவசர காலச் சட்டத்தை அல்-அசாட் நீக்கியிருந்தார். ஆனாலும் இது போராட்டக்காரர்களுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. அவர்கள் மேலும் சுதந்திரமும், அரசியல் சீர்திருத்தங்களும் வேண்டும் எனக் கோரினர்.


ஆர்ப்பாட்டங்கள் குறித்து அரசுத் தொலைக்காட்சி அறிவிக்கையில், வன்முறைச் சம்பவங்களில் இராணுவத்தினர் சம்பந்தப்பட்டிருக்கவில்லை எனவும், ஆயுதக் குழுக்களே வன்முறைகளில் இறங்கின எனவும் கூறியது. இராணுவத்தினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையே பயன்படுத்தினர் என அரசு கூறுகிறது.


வெள்ளிக்கிழமை வன்முறைகளை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் நாட்டில் இடம்பெற்ற கிளர்ச்சிகளின் போது 300 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர்.


மூலம் தொகு